
தேர்தலில் வெற்றி பெற பணம் முதற்கொண்டு பகை வரை அத்தனை வகை ஆயுதங்களையும் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் கடைசி முயற்சியாக ‘சென்டிமெண்ட்’ சமாசாரங்களையும் இறக்கி வைப்பார்கள். அப்படியொரு வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது தி.மு.க.
உடல் சுகவீனத்தால் கோபால புர இல்லமே உலகமென்று இருக்கிறார் கருணாநிதி. ஆனாலும் கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலையில் கவனிக்கத்தக்க முன்னேற்றங்கள். அதன் விளைவாக தலைவர்கள் சந்திப்பு, முரசொலி கண்காட்சியரங்க பார்வையிடல் என்று முன்னேற்றம் முஸ்தீபு காட்டியது.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இரவில் கருணாநிதியை அறிவாலயத்துக்கு அழைத்துச் சென்றனர் ஸ்டாலின், செல்வி, ராசாத்தியம்மாள் ஆகியோர். இது அக்கட்சி தொண்டர்களை குதூகலிக்க வைத்திருக்கிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் பிரச்சாரத்தில் கருணாநிதி பற்றிய சென்டிமெண்ட் விஷயங்களைப் பேசி ஓட்டு வேட்டையாடும் மூவ்களில் உள்ளனர் அவரது கட்சியினர். அந்த வகையில் “மருத்துவரின் அறிவுரைப்படி ஓய்வில் இருந்தாலும் கூட தலைவரின் மனமெல்லாம் மக்களைத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறது. உங்களையெல்லாம் சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய வர நினைக்கிறார் ஆனால் மருத்துவர்களோ ஓய்வுக்கு பரிந்துரைக்கின்றனர்.
இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷை நீங்கள் வெற்றி பெற வைப்பீர்களேயானால் உங்கள் இல்லம் தேடி வந்து நன்றி சொல்வார் முத்தமிழறிஞர். தளபதியார் அவர்கள் தலைவரை நிச்சயம் அழைத்து வருவார்கள். அவர் கைகூப்பி உங்களுக்கு நன்றி சொல்தை கண்ணீர் பெருக்கோடு நீங்கள் காணத்தான் போகிறீர்கள்!’ என்று சற்றே தழுதழுத்த குரலில் பேசி மக்களை உருக வைக்கின்றனர்.
கரன்ஸி மழைகளுக்கு இடையில் இந்த கண்ணீர் துளிகள் எடுபடுமா? கவனிபோம்!