நிலோஃபர் கபிலுக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக..! குறுக்கே வந்து காய் நகர்த்திய அதிமுக..!

By Selva KathirFirst Published May 25, 2021, 11:16 AM IST
Highlights

கைமேல் பலனாக நிலோபர் கபில் திமுகவிற்கு தாவ ஓகே சொல்லியுள்ளார். கட்சியில் நல்ல பதவி உள்ளிட்ட டிமாண்டுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளது. இந்த தகவல் அதிமுக மேலிடத்திற்கு உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு அமைச்சராக இருந்த ஒருவர் கட்சி மாறுவது அவ்வளவு சரியாக இருக்காது என்று அதிமுக நினைத்துள்ளது.

நிலோஃபர் கபில் மீதான மோசடி புகார்கள் மட்டுமே அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதற்கான காரணம் இல்லை என்கிற தகவல் கசிய ஆரம்பித்துள்ளது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தது முதலே அங்கு மாவட்டச் செயலாளர், அமைச்சராக இருந்த வீரமணி மற்றும் நிலோபர் கபில் இடையே மோதல் இருந்து வந்தது. வீரமணி ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல பெயர் காரணமாக அடுத்தடுத்து பதவிகளை பெற்று மேலே வந்தவர். ஆனால் நிலோஃபர் கபில் அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர். ஜெயலலிதாவிற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை கொடுத்த போது கையில் உருட்டுக்கட்டையுடன் சாலையில் இறங்கி கடைகளை மூட வைத்து அதிர வைத்தவர் நிலோஃபர் கபில்.

நிலோஃபர் கபில் கையில் உருட்டுக்கட்டையுடன் சாலையில் வலம் வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதிமுக மேலிடத்தாலும் கவனிக்கப்பட்டவர் ஆனார். அப்போது வாணியம்பாடி நகர்மன்ற தலைவராக இருந்த நிலோபர் கபிலுக்கு 2016 தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். வெற்றி பெற்று வந்த அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. வாணியம்பாடி மட்டும் அல்லாமல் வேலூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள் இடையே நிலோபருக்கு நல்ல பெயர் இருந்த காரணத்தினால் கட்சியில் வேகவேகமா அவரால் வளர முடிந்தது.\

இதனிடையே நிலோபரின் வளர்ச்சி அருகாமை தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான வீரமணிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் நிலோபரை கட்சியில் மேலும் வளரவிடாமல் அவர் பார்த்துக கொண்டார். இதற்கிடையே திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகும் கூட கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவியை நிலோபரால் பெற முடியவில்லை. அத்தோடு தேர்தலில் போட்டியிடவும் நிலோபருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்போது முதலே இனி அதிமுக சரிவராது என்கிற முடிவிற்கு வந்த நிலோபர், திமுக தரப்புடன் தொடர்பில் இருக்க ஆரம்பித்துள்ளார். தேர்தல் முடிந்து திமுக ஆட்சி அமைந்த உடன் அதிமுகவில் இருந்து ஒரு பெருந்தலையை திமுகவில் ஐக்கியமாக்கும் முயற்சிகள் நடைபெற்றன.

கைமேல் பலனாக நிலோபர் கபில் திமுகவிற்கு தாவ ஓகே சொல்லியுள்ளார். கட்சியில் நல்ல பதவி உள்ளிட்ட டிமாண்டுகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளது. இந்த தகவல் அதிமுக மேலிடத்திற்கு உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு அமைச்சராக இருந்த ஒருவர் கட்சி மாறுவது அவ்வளவு சரியாக இருக்காது என்று அதிமுக நினைத்துள்ளது. மேலும் நிலோபர் திமுக சென்றால் அவரை போலவே அதிருப்தியில் உள்ளவர்கள் திமுக பக்கம் செல்ல வாய்ப்பு உருவாகும் என்று கருதியுள்ளது. இதனை அடுத்து தான் அவர் மீதான வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாரை அதிமுக தலைமையே தூசி தட்டியுள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும் நிலோபர் கபில் மீது அவசர அவசரமாக டிஜிபி அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக புகார் அளிக்கப்பட்டதிலும் அதிமுகவின் கையே இருப்பதாக சொல்கிறார்கள். அத்தோடு நிலோபர் கபில் மீது புகார் அளிக்கப்படுவதற்கு முன்பே அவரை கட்சியில் இருந்து அதிமுக நீக்கிவிட்டது. இதற்கு காரணம் அவர் திமுகவோடு பேசும் பேரத்தின் பலத்தை குறைக்கத்தான் என்கிறார்கள். அந்த வகையில் நிலோபர் கபில் மீது தற்போது 6 கோடி ரூபாய் மோசடி புகார் உள்ளது. எனவே அவரை திமுக ஏற்றுக் கொள்ளுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் நிலோபர் கபிலை கைது செய்ய வேண்டிய நிலையும் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இப்படி முன்னாள் அமைச்சரான நிலோபருக்கு திமுக ஸ்கெட்ச் போட்ட நிலையில் குறுக்கே வந்து முட்டுக்கட்டை போட்டுள்ளது அதிமுக.

click me!