விசிகவின் பானை சின்னத்தால் அலறும் திமுக... குன்னம் தொகுதியில் இப்படி ஒரு சிக்கல்..!

By Asianet TamilFirst Published Mar 30, 2021, 9:23 PM IST
Highlights

விசிகவின் பானை சின்னத்தால் குன்னம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அறிவித்தது. அந்தக் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளில் பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. விசிக போட்டியிடும் 6 வேட்பாளர்களும் பானை சின்னத்தில் களமிறங்கி பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த 6 தொகுதிகளைத் தவிர்த்து பிற தொகுதிகளில் பானை சின்னம் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பானை சின்னம் குன்னம் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்தத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ராவணன் என்பவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் திமுக வேட்பாளர் சிவசங்கரை அச்சப்பட வைத்துள்ளது. ஏனென்றால்,  2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டார். இந்த சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில் குன்னம் தொகுதியும் ஒன்றாகும். இந்தக் குன்னம் தொகுதியில் 2019-இல் திருமாவளவனுக்கு ஆதரவாக வரையப்பட்ட பானை சின்னம் பல இடங்களில் அழிக்கப்படாமல் உள்ளது கூறப்படுகிறது. 
இந்நிலையில் தற்போது குன்னம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதால், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக இருப்பாரோ என்று வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படுமோ என்ற அச்சம் திமுக நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் பட்டியலின மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்கள் பானை சின்னத்துக்கு வாக்களித்துவிடுவார்களோ என்றும் திமுகவினர் பயப்படுகின்றனர். விசிகவின் பானை சின்னத்தால் திமுக வேட்பாளருக்கு இப்படி ஒரு சிக்கல் குன்னத்தில் ஏற்பட்டுள்ளது. 
 

click me!