திராவிட மாடல் என திமுக சொல்கிறது. நான் சொல்வது பாட்டாளி மாடல்... முதல்வர் கனவில் மிதக்கும் அன்புமணி.

By Ezhilarasan BabuFirst Published May 16, 2022, 3:27 PM IST
Highlights

எல்லா சமுதாயமும் நம் கட்சிக்கு தேவை என்றும், எந்த கட்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக வெற்றி பெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எல்லா சமுதாயமும் நம் கட்சிக்கு தேவை என்றும், எந்த கட்சி எவ்வளவு பணம் கொடுத்தாலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக வெற்றி பெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திமுக சொல்வது திராவிட மாடல் ஆட்சி என்றும் ஆனால் நான் சொல்வது பாட்டாளி மாடல் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக-திமுகவுக்கு மாற்று பாமக தான் என பல ஆண்டுகளாக அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் பேசி வருகிறார். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராகவும் களமிறக்கினார் ராமதாஸ், ஆனால் அது எடுபடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. சாதிக் கட்சி என்ற முத்திரையும், மாறி மாறி கூட்டணி வைக்கும் கட்சி என்ற விமர்சனமும் அதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. 

ஆனால் அதன் பிறகு மீண்டும் அதிமுக பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றது  பாமக. இந்நிலையில் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் முதல்வர் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடமாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அக்கட்சியினர் மத்தியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் சேலத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது, கொட்டும் மழையிலும் பாமகவினர் திரண்டு வந்து இருக்கிறீர்கள், ராமதாஸ் எப்படி சேலத்தில் கிராமம் கிராமமாக சென்று வன்னியர் சங்கத்திற்காக மக்களை சந்தித்து எழுச்சி ஏற்படுத்தினரோ அதேபோல எழுச்சி இப்போது உருவாகி இருக்கிறது.

தற்போது சேலத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அடுத்த தேர்தலில் 14 தொகுதியிலும் பாமகவே வெற்றி பெறும். அதற்கு என்னுடைய தம்பிகளும் தங்கைகளும் எனக்கு உதவி செய்வார்கள். இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத அளவுக்கு கோடிக்கணக்கான தம்பி  தங்கைகளை நான் கொண்டிருக்கிறேன்.  எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் பாமக ஆட்சி அமைக்கும்.  ஒரே ஒருமுறை நான் ஆட்சிக்கு வந்தால் போதும் பாமக 5 ஆண்டுகள் ஆட்சி செய்தால் போதும் தமிழகம் முன்னேற்றம் அடைந்து விடும். அதிமுக திமுக கட்சிகள் மாறி மாறி 55 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறார்கள், இது வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்கும், 20 ஆண்டு காலமாக நிழல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறோம். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நிஜமான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வோம்.

கட்சிக்கான சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது, புதிதாக பொறுப்பேற்றுள்ளவர்கள் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை பெற்று பணியாற்றவேண்டும். நமக்குள் எந்த சாச்சரவும் இருக்கக்கூடாது, ஒற்றுமையாக செயல்பட்டால்  நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. திமுகவினர் கூறுவது திராவிட மாடல், ஆனால் நான் சொல்வது பாட்டாளி மாடல், பாமக ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் கல்வி கொடுப்போம், ஒரு சொட்டு சாராயம் தமிழகத்தில் இருக்காது. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்வார்கள். மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் 11 சட்டப்பேரவைத் தொகுதிக்கு விரிவுபடுத்தப்படும். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மது அருந்தும் நிலை தமிழகத்தில் உள்ளது. வருமானத்திற்காக இளைஞர்களை சீரழிக்கக் கூடாது. பாமக ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குக்காகத்தான் போடப்படும்.

கிராமம் கிராமமாக மக்களை சென்று சந்திக்க போகிறேன், சேலத்தில் அனைத்து கிராமத்திலும் பாமக கொடி பறக்க வேண்டும் என அவர் பேசியுள்ளார். ஏற்கனவே மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என முந்தைய சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி களமிறக்கபட்டார். அதில் பாமக படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் மீண்டும் முதல்வர் கனவில் அன்புமணி ராமதாஸ் கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!