
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. இதனையடுத்து கூட்டணி கட்சிகளுக்கு பதவி பங்கீடப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சியினருக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதனால் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிக்கு வழங்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் பதவி விலகவில்லையென்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.
இருந்தபோதும் திமுகவினர் பதவி விலக மறுத்து வந்தனர். தேர்தலில் பல கோடி ரூபாய் செலவு செய்ததாக தெரிவித்தவர்கள் தாங்கள் பதவியை விட்டு விலக முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர் இதனையடுத்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுற்றுபயணம் செய்திருந்த போது மீண்டும் திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து திமுக மாவட்ட செயலாளர்கள் எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய ஒத்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, இதில் திமுகவை சேர்ந்த ஜெயபிரபா போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனையடுத்து விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஜெயபிரபா ராஜினாமா செய்தார். இதே போல புதுக்கோட்ட மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, அந்த இடத்திலும் திமுகவை சேர்ந்த தமிழ்செல்வன் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அவரிடம் மாவட்ட செயலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தனது பதவியை விட்டு விலகினார். மேலும் . கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது இதில் திமுகவை சேர்ந்த நித்யா மனோகர் எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு துணை தலைவர் பதவி வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து அந்த பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் திமுக சார்பாக போட்டியிட்டு புவனேஷ்வரி என்பவர் வெற்றிபெற்றார். முதலமைச்சர் உத்தரவையடுத்து தனது பதவியை புவனேஷ்வரி ராஜினாமா செய்துள்ளார். திமுக தலைமையின் உத்தரவையேற்று பெரும்பாலான இடங்களில் திமுகவினர் பதவி விலகியுள்ளது திமுக கூட்டணி கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.