DMK : 1996-இல் நடந்தது ரிப்பீட்டு.! ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார்.? ஆர்வத்தில் காத்திருக்கும் உடன்பிறப்புகள்!

By Asianet TamilFirst Published Dec 21, 2021, 9:16 AM IST
Highlights

ஸ்டாலின் 2006-இல் தான் அமைச்சரானார். ஸ்டாலினுக்கு தாமதமாகவே எல்லாப் பதவிகளும் கிடைத்தன. ஆனால், உதயநிதிக்கு ஜெட் வேகம். 2019-இல் அரசியலுக்குள் வந்த உதயநிதி, இரண்டே ஆண்டுகளில் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், 1996-இல் கருணாநிதி எடுத்த முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுகவில் மு.க. ஸ்டாலின் படிப்படியாக வளர்த்து ஆளாக்கப்பட்டார். 1975-இல் தொடங்கியே அரசியலுக்கு வந்துவிட்ட ஸ்டாலின், 1984 சட்டப்பேரவைத் தேர்தலில்தான் முதன் முறையாகத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முதன் முறையாக ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவே 9 ஆண்டுகள் ஆனது. 1989-ஆம் ஆண்டில்தான் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அப்போது அமைந்த திமுக அமைச்சரவையை சீனியர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள். பொன்முடி, கே.என். நேரு என ஒருசில புது முகங்கள்தான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார்கள். ஸ்டாலின் அமைச்சராவாரா என்ற கேள்விக்கூட அப்போது எழவில்லை. மீண்டும் 1996-இல் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், ஸ்டாலின் அமைச்சராவாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், மு.க. ஸ்டாலின் அமைச்சராகவில்லை. அவரை அமைச்சராக்க கருணாநிதியும் விரும்பவில்லை. மாறாக, சென்னை மாநகராட்சி தேர்தலில் மேயராக ஸ்டாலினை களமிறக்கினார். இதுதொடர்பாக அண்மையில் முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசியிருந்தார். “1996-ம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்தபோது, என்னை அமைச்சராக்க வேண்டும் என்று நிர்வாகிகள் அனைவருமே கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் கருணாநிதி என்னை அமைச்சர் ஆக்கவில்லை. நானும் அந்த நேரத்தில் அதை விரும்பவில்லை. நிர்வாகிகள் எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் கருணாநிதி அதை மறுத்துவிட்டார். அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்டேன். மக்கள் வாக்குகளை பெற்று மேயராகக்கூடிய, முதல் மேயராக நான் பொறுப்பேற்றேன். அப்போது கருணாநிதி என்னிடம், ‘எல்லாரும் சேர்ந்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு சிறிய அறையில் உன்னை உட்கார வைக்க பார்த்தார்கள். நான் இவ்வளவு பெரிய பில்டிங்கில் (ரிப்பன் மாளிகை) உன்னை உட்கார வைத்திருக்கிறேன்’ என்று பெருமையுடன் கூறினார்.” என்று பேசியிருந்தார் ஸ்டாலின்.

பின்னர் ஸ்டாலின் 2006-இல் தான் அமைச்சரானார். ஸ்டாலினுக்கு தாமதமாகவே எல்லாப் பதவிகளும் கிடைத்தன. ஆனால், உதயநிதிக்கு ஜெட் வேகம். 2019-இல் அரசியலுக்குள் வந்த உதயநிதி, இரண்டே ஆண்டுகளில் எம்.எல்.ஏ. ஆகிவிட்டார். அடுத்து அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள் வரிசையாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது, 96-இல் கருணாநிதியிடம் அமைச்சர்களும் நிர்வாகிகளும் வலியுறுத்தியதைப்போல பேசத் தொடங்கிவிட்டார்கள். ஸ்டாலின் குடும்பத்துக்கும் உதயநிதிக்கும் மிகவும் நெருக்கமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்த பேச்சை, அமைச்சர்கள் வரிசையாக வழிமொழிந்து வருகிறார்கள். அவர் துணை முதல்வராகவே வருவார் என்று சீமான் ஆருடமே கூறியிருக்கிறார்.

1996-இல் கருணாநிதி யோசித்து ஸ்டாலினை மேயராக்கினார். ஆனால், உதயநிதி விஷயத்தில் ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு வேளை கருணாநிதியைப் போல ஸ்டாலினும் 96-இல் எடுத்த முடிவைப் போல எடுப்பாரா? சில தினங்களுக்கு முன்பு அன்பில் மகேஷ் இதற்கும் பதில் சொல்லிவிட்டார். “உதயநிதியை மேயராக்கினாலும் சிறப்பாக செயல்படுவார். அமைச்சராக்கினாலும் இன்னும் சிறப்பாக செயல்படுவார்” என்று கூறியிருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் உதயநிதி மேயர் தேர்தலில் களமிறங்குவாரா என்றும் பேசப்படுகிறது. ஆனால், 96-இல் ஸ்டாலினை மேயராக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், இப்போது நடைபெற இருப்பது மறைமுகத் தேர்தல். மேயராக வருபவரும் ஏதாவது ஒரு வார்டில் போட்டியிட்டு வெல்ல வேண்டும். எனவே, மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.

எனவே,  உதயநிதிக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படும் என்றே திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஸ்டாலின் என்ன முடிவை எடுப்பார் என்பதை அறிய உடன்பிறப்புகளும் ஆவலில் உள்ளனர். 

click me!