திமுக கோரிக்கை நிராகரிப்பு...? இந்த மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடங்களில் உள்ளாட்சி தேர்தல்..!

By vinoth kumarFirst Published Dec 5, 2019, 3:29 PM IST
Highlights

மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்க தயார் என தெரிவித்தனர். ஆகையால், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனையடுத்து, திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடால் ஒத்திவைத்தனர்.

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேநேரத்தில் மாநகராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதற்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது, திமுக தரப்பில் உரிய சட்ட முறைகளை கடைபிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின் அவற்றில் தொகுதி மறுவரையறை செய்ய தேவையில்லை என தெரிவித்தனர். 

இதில் குறுக்கிட்ட நீதிபதிகள் வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத நிலையில் தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கலாம் என தெரிவித்தது. இதனையடுத்து, வார்டு மறுவரையை பணிகள் முடிவடையாத 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? என்பது குறித்து பிற்பகல் 2 மணிக்குள் பதில் அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உள்ளாட்சி தேர்தலை ஒன்றாக நடத்த வேண்டும் இல்லையென்றார் ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர். 

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்க தயார் என தெரிவித்தனர். ஆகையால், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனையடுத்து, திமுக தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடால் ஒத்திவைத்தனர்.

click me!