
OPS, EPS இருவருக்கும் ஆதரவு இல்லை…. தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என ஸ்டாலின் வலியிறுத்தல்…
அதிமுக வில் தொடர்ந்து நிலவி வரும் கடுமையான அதிகார சண்டை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சட்டப்பேரவையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிப்போம் என ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கச்சை கட்டி நிற்கின்றனர்.
இன்னும் ஓரிரு நாளில் இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இரு தரப்பினருமே பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால் ஆட்சியை கலைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளுநர் தள்ளப்படுவார்.
இத்தகைய சூழ்நிலையைத்தான் திமுகவினர் எதிர்பார்த்து காத்திருக்கினறனர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று திமுக நம்புவதால், தேர்தலை சந்திக்க அக்கட்சி தயாராகி வருகிறது.
திமுகவில் 89 எம்எல்ஏக்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளான காங்கிரசில் 8 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் ஒரு எம்எல்வும் என மொத்தம் 98 எம்எல்ஏக்களின் பலம் தி.மு.க.வுக்கு உள்ளது.
ஆனால், ஆட்சியமைக்க 118 எம்எல்ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது, திமுகவுக்கு கூடுதலாக 20 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதிமுக.வில் இருந்து 20 பேர் திமுக பக்கம் சாய்ந்தால் திமுக ஆட்சியமைக்க அது சாதகமாக அமையும் என கருத்து நிலவுகிறது.
ஆனால் இதையெல்லாம் தவிர்த்துவிட்டு தேர்தலை சந்திப்பதுதான் ஒரே வழி என திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தற்போது இதற்கான பணிகளில் திமுக இறங்கியுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று திமுக நம்புவதால், முன்கூட்டியே சென்னையில் வந்து திமுக எம்எல்ஏக்கள் தயாராக இருக்கும்படி வாய்மொழி உத்தரவு போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.