
யாரேனும், தந்தையை கொலை செய்ய முயன்றவர்களுடன் தேர்தலுக்காக கூட்டு வைக்க பார்த்து இருக்கிறோமோ?, அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது என்று முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பிரதமர் மோடி.
தேர்தல்
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக 72 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 67 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளன.
பிரசாரம்
இந்நிலையில், 3-ம் கட்டமாக தேர்தலுக்காக பிரசாரத்தில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கன்னோஜ் நகரில் நேற்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது-
ஏற்றுக்கொள்ளவில்லை
உத்தரப்பிரதேச மக்கள் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியை ஆதரிக்கவில்லை. உத்தப் பிரதேசத்தில் சமீபத்தில் என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள் தானே? மாநகராட்சி தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியே பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. இதில் இருந்தே, காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. இந்த கூட்டணி மாநிலத்தின் கனவுகளை சிதறடித்து விடுவார்கள்.
கொலை முயற்சி
கடந்த 1984ம் ஆண்டு, முலாயம்சிங் யாதவ் மீது காங்கிரஸ் கட்சி நடத்திய தாக்குதலை எப்படி அகிலேஷ் யாதவ் மறந்துவிட்டார்? என்பதை கேட்க வேண்டும். தனது தந்தையை கொலை செய்ய முயன்றவர்களுடன், தேர்தலுக்காக கூட்டு வைப்பது என்பது வெட்கக்கேடு? இந்திய அரசியல் இப்படியா தரம் தாழ்ந்து சென்றுவிட்டது?
அனுபவம் இல்லை
முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசியலுக்கு அனுபவம் இல்லாதவர். அதனால்,தான் காங்கிரஸ் கட்சியின் தந்திரங்களை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆளும் சமாஜ்வாதி அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் மத்தியஅரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்காமல், தங்களது சமூதாயத்தினரின் நலனுக்காக செயல்படுகிறது. ஏழைமக்களுக்கு பெரும்பாலான நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை.
ஆழ்ந்த தூக்கம்
மாநிலத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் மக்களைபட்டியல் எடுத்து, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்காக பணத்தை ஒதுக்குவதில் சமாஜ்வாதி அரசு முனைப்பு காட்டவில்லை. மாநில அரசு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது, ஏழைகளுக்காகவும், அனாதைகளுக்காகவும் செலவு செய்ய பணம் ஒதுக்க ஆர்வம் காட்டவில்லை.
தேர்தலில் போட்டியும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒவ்வொன்றும், ஏதாவது ஒருவகையில் ஒருவொருக்கு ஒருவர் உதவி செய்துகொள்கிறார்கள்.
வீழ்ச்சி
சமாஜ்வாதி அரசில் உத்தரப்பிரதேசத்தில் வளர்ச்சி தாழ்ந்துவிட்டது; பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துவிட்டது; விவசாயிகள் நலன் சரிந்துவிட்டது; வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது; சாலை வசதிகள் தரம் தாழ்ந்துவிட்டன.
சொந்த கார் இல்லை
எனக்கு சொந்தமாக ஒரு கார் கூட கிடையாது. ஆனால், முலாயம் சிங்யாதவின் இளைய மகன் பிரதீக் யாதவிடம் கோடிக்கணக்கான விலை மதிப்புடைய பல கார்கள் இருக்கின்றன. இவர்கள்தான் தங்களை சோசலிவாதிகள் என கூறிக்கொள்கிறார்கள்.
ஆனால், பாரதியஜனதா அரசு ஆட்சிக்கு வந்தால், ஏழைமக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும் முழுமையாக உழைக்கும்
இவ்வாறு அவர் பேசினார்.