திமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல்..! காங்கிரசுக்குள் பூகம்பம்..!

By vinoth kumarFirst Published Jul 2, 2019, 10:31 AM IST
Highlights

திமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை திமுக தன்னிச்சையாக அறிவித்த காரணத்தினால் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

திமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை திமுக தன்னிச்சையாக அறிவித்த காரணத்தினால் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு முதல் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடித்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி இணைந்து திமுக 89 தொகுதிகளிலும் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வென்றது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வென்றனர்.

 

இதன் மூலம் சட்டப்பேரவையில் திமுகவிற்கு 101 எம்எல்ஏக்கள் என்ற அளவில் பலம் அதிகரித்தது. வசந்தகுமார் ராஜினாமாவால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை ஏழாக குறைந்துவிட்டது. இந்த நிலையில் தான் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலமும் முடிந்தது. 

வழக்கமாக அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டு வந்தார். இந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங்கை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப காங்கிரசிடம் போதுமான எம்எல்ஏக்கள் இல்லை. இதனால் தமிழகத்தில் தனது கூட்டணி கட்சியான திமுகவிடம் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு தொகுதியை வழங்குமாறு காங்கிரஸ் மேலிடம் கூறியது. 

ஆனால், ஏற்கனவே மதிமுகவிற்கு ஒரு தொகுதியை கொடுத்துவிட்டதால் 2 தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்று திமுக அடம் பிடித்து வந்தது. ஆனால் தங்கள் எம்எல்ஏக்கள் 8 பேர் ஆதரவு மாநிலங்களவை தேர்தலில் தேவைப்படும் என்பதால் தங்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தனது டிமான்டை அதிகப்படுத்தியது. 

இந்த நிலையில் தான் அவசர அவசரமாக திமுக வேட்பாளர் பட்டியலை நேற்று ஸ்டாலின் வெளியிட்டார். கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியுடன் மாநிலங்களவை தேர்தல் குறித்து எதுவும் பேசாமல் தன்னிச்சையாக திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இது காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகன் சிங்குக்கு ஒரு எம்பி பதவி கேட்டு வரும் நிலையில் திமுக இப்படி செய்துவிட்டதே என்று காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. ஏற்கனவே திமுக மீது அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் இதனை சாக்காக வைத்து அக்கட்சிக்கு எதிராக டெல்லியில் காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். 

மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் என்று வந்தால் நமது ஆதரவு இல்லாமல் திமுகாவால் வெல்ல முடியாது. இதே போல் நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி தேர்தலிலும் காங்கிரஸ் ஆதரவு திமுகவிற்கு தேவை. அப்படி இருக்கையில் மாநிலங்களவை தேர்தலில் ஸ்டாலின் தனித்து முடிவெடுத்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று டெல்லிக்கு இங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் கடிதங்களை தட்டி வருகின்றனர்.

click me!