நாங்களே ஆட்சியை கலைத்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல்..! இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த டிகேஎஸ்

By Ajmal Khan  |  First Published Apr 3, 2023, 2:15 PM IST

எடப்பாடி பழனிசாமி, ஒ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள டிகேஎஸ் இளங்கோவன், அண்ணாமலை வெளியிடும் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்.


தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி கே எஸ் இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் வர இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமே தெரியாதுனு நினைக்கிறேன். நாங்களே ஆட்சியை கலைத்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும். எஸ் ஆர் பொம்மை வழக்கு வந்த பிறகு, எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி ஆட்சியை கலைத்தார்களே தவிர, வேறு இல்லை. விரைவில் ஆட்சி மாற்றம் வரும் முதலமைச்சர் ஆவேன் என் இபிஎஸ் கூறியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

Latest Videos

அதற்கு அவர், மீண்டும் முதலமைச்சராவேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னால்தான் அவருடன் உள்ளவர்கள் இருப்பார்கள், இல்லையெனில் ஒ பன்னீர்செல்வத்திடம் சென்றுவிடுவார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லை. முதலில் மோடியை சந்தித்து கர்நாடக தேர்தலையும் அதனுடன் சேர்த்து வையுங்கள் என எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் அளித்த அவர்,

ஆருத்ரா போன்ற எல்லா தவறுகளும் ஆட்சியில் இருக்கிறோம் என பாஜகவினர் செய்கிறார்கள். பெரிய ஊழல்களில் பணக்காரர்களின் புரோக்கராக மோடி செயல்படுகிறார். பணக்காரர்களுக்கு உதவுகிறார். எடப்பாடி பழனிசாமி, ஒ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். அண்ணாமலை வெளியிடும் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்

click me!