நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரே ஆண்டு உள்ள நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வாக்குச்சாவடி முகவர்களோடு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
நாடாளுமன்ற தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக ஏற்கனவே தீவரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநில தலைவர்களையும் தேர்தல் பணிகளை தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து பாஜக ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களை சென்றடையும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. 3 வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதே போல் பாஜகவை எதிர்க்க எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இதற்காக பல்வேறு ஆலோசனை கூட்டங்களை எதிர்கட்சிகள் நடத்தியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கையாக போச்சு.. கொதிக்கும் டிடிவி. தினகரன்..!
வாக்குசாவடி முகவர்களோடு ஆலோசனை
இந்தநிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சி நிர்வாகிள் , தொண்டர்கள் தயாராக வேண்டும் என வலியுறுத்தினார். இந்தநிலையில் அடுத்தகட்டமாக தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக வாக்குச்சாவடி முகவர்களோடு ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், வாக்குச்சாவடி முகவர்கள் (BLA - 2) அனைவருடனும் கழகத் தலைவர் அவர்கள் கலந்துரையாடும் கூட்டம் நவம்பர் 12 ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறும். காணொளிக் கூட்டத்தினை 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக உள்ளரங்குக் கூட்டமாக ஏற்பாடு செய்திட வேண்டுமென மாவட்டச் செயலாளர்களும்/பொறுப்பு அமைச்சர்களும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அறிவாலயம் அறிவிப்பு
தொகுதிக்குரிய அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். தலைவர் அவர்கள் சில தொகுதிகளில் உள்ள முகவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அழைத்து அவர்களுடன் நேரடியாக உரையாடுவார். மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவருக்குரிய தொகுதியில் முகவர்களுடன் இணைந்து பங்கேற்க வேண்டும். நகர-ஒன்றிய - பேரூர் கழகச் செயலாளர்களும் அவரவர் தொகுதியில் கலந்துகொள்ள வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் காணொளி சாதனங்கள் தொழில்நுட்ப ரீதியில் சோதனை செய்யப்பட்டு, மின்தடை ஏற்படுமாயின் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளையும் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வாக்காளர் பட்டியலை சரிபார்க்க உத்தரவு
வாக்குச்சாவடி முகவர்களின் பட்டியலானது தலைவர் அவர்களின் நேரடிப் பார்வைக்குச் செல்வதால், முகவர்கள் பட்டியலை இறுதி செய்து வாக்காளர் பட்டியல் வரிசை எண், தொடர் எண் சரிபார்க்கப்பட்டு உடனடியாக தலைமைக் கழகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைப்பதை உறுதி செய்திட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அந்த தலைமை கழக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்