தமிழகம் மீது ரசாயன தாக்குதல்... மோடி அரசு மீது மு.க. ஸ்டாலின் சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டு!

By Asianet TamilFirst Published Aug 29, 2019, 6:44 AM IST
Highlights

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இதனால் தமிழகத்தைப் பழிவாங்குகிறார்கள். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்து டெல்டாவில் வேளாண்மை நிலத்தை நாசப்படுத்தி வருகிறார்கள். விவசாயம் செய்தால்தானே தண்ணீர் கேட்பார்கள் என்பதால் நிலத்தை சிதைக்கிறார்கள்.. 

தமிழகம் மீது ரசாயன தாக்குதலை மத்திய அரசு நடத்திவருகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 
காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “இயற்கை சதியால் மட்டும் காவிரி வறண்டு கிடக்கவில்லை. அரசியல் சதியாலும் காவிரி வறண்டு போய் விட்டது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்குத்தான் பாஜக உறுதுணையாக இருக்கிறது. தமிழத்தைப் பற்றி அவர்களுக்கு துளி கூட அக்கறை இல்லை. இதை தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாத ஆட்சி, தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனமாக உள்ளனர். 
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. இதனால் தமிழகத்தைப் பழிவாங்குகிறார்கள். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்து டெல்டாவில் வேளாண்மை நிலத்தை நாசப்படுத்தி வருகிறார்கள். விவசாயம் செய்தால்தானே தண்ணீர் கேட்பார்கள் என்பதால் நிலத்தை சிதைக்கிறார்கள்.. அதனால்தான் ரசாயன தாக்குதலை மத்திய அரசு நடத்திவருகிறது. ஒரு புறம் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், அணுஉலை, நியூட்ரினோ என ரசாயன தாக்குதலை தமிழகத்தின் மீது நடத்திவருகிறது. மறுபுறம் தமிழில் பேசக் கூடாது. இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு எனக் கலாசார தாக்குதலையும் பாஜக நடத்துகிறது.
நாடாளுமன்றத்தில் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பெட்ரோலியத்துறை அமைச்சர், தமிழகத்தில் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டம் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். அதற்கு அடுத்த நாள் சட்டப்பேரவையில் நான், கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நாங்கள் அனுமதி தரவில்லை. தரவும் மாட்டோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகிறார். இவர்களில் யார் சொல்வது உண்மை?, யார் சொல்வது பொய்?


மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களை ஏமாற்றிவருகின்றன. இத்திட்டத்தை கைவிட வேண்டும். அதற்கு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற வேண்டும். அப்படி மாற்றினால்தான் காவிரி டெல்டாவை காக்க முடியும். தமிழகத்தை காக்க முடியும். ரிசர்வ் வங்கியின் உபரி நிதியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெறுவதாக செய்தி வந்துள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி நாட்டில் உள்ள அனைத்து விவசாய கடன்களையும் மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.

click me!