உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏன் தொடை நடுங்குது..? அதிமுகவை மானாவாரியாக வாரிய மு.க. ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Nov 5, 2019, 7:23 AM IST
Highlights

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி அனைத்தும் சீரழிந்து கிடக்கிறது. அதே நேரத்தில், தமிழகத்தின் தனித்துவத்தையும் தமிழர்களின் உரிமைகளையும் பறிக்கும் மத்திய அரசின் திட்டங்களை ராஜவிசுவாசியாக இருந்து செயல்படுத்துவதில் அடிமை அரசான அதிமுகவுக்கே முதலிடமாகும்.
 

இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு உண்மையாகவே தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஆள்வோர் நம்பினால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏன் தொடை நடுங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், “2019 நாடாளுமன்ற தேர்தல், அதோடு சேர்ந்து நடந்த இடைத்தேர்தலில் வெற்றிக்குப் பிறகு நடக்கும் பொதுக்குழுக் கூட்டம் கூடவிருக்கிறது. அண்மையில் நடந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மறந்தது எப்படி என நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. வெற்றி பெற்றால் வெறிகொண்டு ஆட கூடாது; தோல்வி வந்தால் துவண்டு விட கூடாது என்பதுதான் பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் நமக்குக் கற்றுத் தந்துள்ள அரசியல் பாடம். அதை அப்படியே நெஞ்சில் ஏந்திதான் பொதுக்குழு கூடுகிறது.
வெற்றி பெற்ற போது நாம் வகுத்த வியூகங்கள் என்ன, களத்தில் வெளிப்படுத்திய உழைப்பு எத்தகையது, இவை அனைத்தும் இரு தொகுதிகளில் என்னவாயிற்று? ஆளுந்தரப்பின் அதிகார துஷ்பிரயோகப் பாய்ச்சலைக் கணிக்க முடியாத சுணக்கம் நம்மிடம் இருந்ததா? ஒருங்கிணைப்பு குறைந்ததா? தோல்விக்கான உண்மையான, முழுமையான காரணங்கள் என்னென்ன என்பவை அனைத்தும் வெளிப்படுத்தும் வகையில் பொதுக்குழுவில் நேர்மையாக விவாதிக்கப்படும்.
நாம் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்பது உண்மை. அதே நேரத்தில் ஆளுந்தரப்பினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது மாயை. அனைத்து நிலைகளிலும் படுதோல்விகளையே கண்டுள்ள அடிமை அரசு, எல்லோரையும் இதிலும் ஏமாற்றிடும் எண்ணத்தோடு தனது புண்ணுக்கு தானே புனுகு தடவி மறைக்கும் முயற்சியாக இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை சில ஊடகங்களின் உள்நோக்கங்கொண்ட உதவியுடன் கையாள நினைக்கிறது. இந்த இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு உண்மையாகவே தங்களுக்குக் கிடைத்திருப்பதாக ஆள்வோர் நம்பினால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏன் தொடை நடுங்கிட வேண்டும்?
ஓட முடியாத குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல, உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் துணிவில்லாத அதிமுக அரசு நியாயமான இட ஒதுக்கீட்டின்படி தேர்தல் நடத்தக்கோரி கழகம் தொடர்ந்த வழக்கைக் காரணம் காட்டி இழுத்தடித்து, நீதிமன்றங்களால் உச்சந்தலையில் குட்டுக்கு மேல் குட்டு வாங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் தொடங்கி அனைத்தும் சீரழிந்து கிடக்கிறது. அதே நேரத்தில், தமிழகத்தின் தனித்துவத்தையும் தமிழர்களின் உரிமைகளையும் பறிக்கும் மத்திய அரசின் திட்டங்களை ராஜவிசுவாசியாக இருந்து செயல்படுத்துவதில் அடிமை அரசான அதிமுகவுக்கே முதலிடமாகும்.
இந்த ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே தமிழக மக்களின் பெருவிருப்பம். அதனை திமுக தலைமை‌யிலான அணிதான் மாற்றும் என்பது, தமிழகத்தின் உறுதியான நம்பிக்கை. அதற்கான ஜனநாயக களத்தை எதிர்பார்த்திருக்கிறது கழகம். இடையில் இடைத்தேர்தல் போன்ற நாம் சந்தித்த இடையூறுகள்கூட நம்முடைய லேசான சோர்வையும் அலட்சியத்தையும் விரட்டி அடிக்கக்கூடிய விழிப்புணர்வு நிகழ்வேயாகும். அதே நேரத்தில், தமிழகத்தில் தங்களுக்கு வாய்த்த அடிமைகள் அதி புத்திசாலிகள் என நினைத்து, அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு, தனது தமிழர் விரோத திட்டங்கள் அனைத்தையும் அதிமுக அரசு மூலம் செயல்படுத்திக் கொள்வதில் மிகவும் முனைப்பாக இருக்கிறது.
இத்தகைய நிலையில்தான் கழகத்தின் பொதுக்குழு கூடுகிறது. நாட்டுக்கு எப்படி நாடாளுமன்றமோ, அதுபோல கழகத்திற்கு பொதுக்குழு. நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் குரலும் நலனும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும் . கழகத்தின் பொதுக்குழு என்பது, உடன்பிறப்புகளின் உயர்வான குரல். எதிர்காலப் பயணத்திற்கான தெளிவான ஏற்றமிகு பாதையை வகுக்க, ஒவ்வொரு உடன்பிறப்பின் மனசாட்சியாகக் கூடுகிறது கழகப் பொதுக்குழு. நமக்கான பயணத் திட்டத்தை வகுத்து, தமிழ்நாட்டை ஆதிக்க மத்திய அரசிடமிருந்தும்-அடிமை அ.தி.மு.க. அரசிடமிருந்தும் மீட்பதற்கு, கழகப் பொதுக்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.” என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!