இதையும் நீர்த்துப்போக செஞ்சிடாதீங்க... ஒப்புதல் கொடுங்க ஆளுநரே... மு.க. ஸ்டாலின் நறுக்..!

By Asianet TamilFirst Published Oct 19, 2020, 8:34 PM IST
Highlights

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில், இதுவரை ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆளுநர் முடிவு தெரிந்த பிறகு மருத்துவ சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

 
இந்நிலையில், இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்.


தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், "தமிழக ஆளுநர், முதலமைச்சர், மத்திய பா.ஜ.க. அரசு" ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது. நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

click me!