ஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும்... பகிரங்கமாக எச்சரிக்கும் கொங்கு ஈஸ்வரன்..!

By vinoth kumarFirst Published Oct 19, 2020, 6:53 PM IST
Highlights

தமிழக மக்களின் பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்க தமிழக ஆளுநர் தயக்கம் காட்டுவது ஏன் ?. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய பிறகு தமிழக ஆளுநர் மவுனம் காப்பது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அவர் காத்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. 

மருத்துவ இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் கொடுக்கும் மசோதாவை மேலும் ஆளுநர் தாமதப்படுத்தினால் ஜல்லிக்கட்டு போல மக்கள் போராட்டமாக வெடிக்கும் என்று ஈஸ்வரன் கூறியுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில்  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது மிகப்பெரிய சவாலாகவே பார்க்கப்படுகிறது. 

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் ஏழை, எளிய மக்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்கள் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தில் அரசுப்பள்ளியில் பயின்ற ஒருவர் கூட வெற்றி பெறவில்லை என்பதை அறிவோம். இப்படிப்பட்ட சூழலில் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் கணிசமான அரசுப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று இருப்பது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் நீட் பயிற்சி மையத்தில் கட்டணம் செலுத்தி பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். 

ஏழை எளிய குடும்பங்கள் தங்களது பிள்ளைகளின் மருத்துவ கனவை நிறைவேற்ற போராடி கொண்டிருக்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதை தமிழக அரசு கருத்தில் கொண்டு அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் மருத்துவ சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கடந்த மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஒரு மாத காலமாக தமிழக ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் மவுனமாக இருந்து வருகிறார். 

இந்த மசோதாவை பற்றிய தமிழக ஆளுநரின் முடிவு என்னவென்று உடனடியாக தெரிவிக்க வேண்டும். தமிழக மக்களின் பிரதிநிதிகள் நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்க தமிழக ஆளுநர் தயக்கம் காட்டுவது ஏன் ?. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்திய பிறகு தமிழக ஆளுநர் மவுனம் காப்பது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அவர் காத்திருக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவிற்கு மத்திய அரசு கொடுத்த மரியாதையையும், தற்போது தமிழக ஆளுநர் கொடுக்கும் மரியாதையையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு இந்தாண்டே அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழக ஆளுநர் இனியும் காலதாமதப்படுத்தினால் தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என கூறியுள்ளார்.

click me!