அதிமுக அமைச்சரை சங்கி என்று அழுத்தமாக அழைத்த மு.க. ஸ்டாலின்.. ராஜேந்திர பாலாஜி மீது ஆவேச அட்டாக்!

By Asianet TamilFirst Published Nov 3, 2020, 9:59 PM IST
Highlights

தன்னை எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் முழு சங்கியாகவே மாறி ராஜேந்திர பாலாஜி செயல்பட்டு வருகிறார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

விருதுநகர் மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம் - 2021’ என்ற தலைப்பில் சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நீட் தேர்வை எதிர்ப்பதாக நாடகம் ஆடும் தமிழக அரசு, நீட் தேர்வை தடுப்பதற்கோ, அதிலிருந்து விலக்கு பெறுவதற்கோ எந்த முன் முயற்சியையும் எடுக்கவில்லை. இதனால் 13 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டார்கள். அதனைத் தற்கொலை என்று கூடச் சொல்லக் கூடாது. அது மத்திய - மாநில அரசுகள் நடத்திய கொலைகள். அந்த நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கனவு சிதைந்தது. கோச்சிங் மையங்களில் லட்சங்களைக் கட்டிப் படிப்பவர்களால்தான் வெற்றி பெற முடியுமானால், ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட பட்டியலினப் பிள்ளைகள் எப்படி மருத்துவக் கல்லூரிகளுக்குள் நுழைய முடியும்? இதனை மத்திய அரசு கொஞ்சமும் சிந்திக்கவில்லை.
திமுகவின் தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக 7.5 சதவீத இடஒதுக்கீட்டு உரிமை இப்போது கிடைத்துள்ளது. இதற்கும் ஒரு மசோதாவை நிறைவேற்றிவிட்டு சும்மா இருந்தார் முதல்வர். அவர் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் நாம் செய்து அந்த மசோதாவுக்கு ஆளுநரின் அனுமதியை வாங்கித் தந்தோம். மத்திய அரசுடன் துணிச்சலோடு மோதுவதற்கு அதிமுக அரசு தயாராக இல்லை! இதேபோல் இன்னொரு துரோகத்தையும் மத்திய - மாநில அரசுகள் செய்தன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. ஆனால் இந்த வருடம் அப்படித் தர முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்னது.
இதனை எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. அதைவிட முக்கியமாக மத்திய அரசு நியமித்த குழுவில், இந்த ஆண்டு அமல்படுத்த வேண்டும் என்று எடப்பாடி அரசு சொல்லவும் இல்லை. இப்படிப்பட்ட இரட்டைத் துரோகத்தை எடப்பாடி அரசு செய்தது. சமூகநீதி விஷயத்தில் அதிமுக அரசு ஆடிய பொய்யாட்டங்கள்தான் அதிகம். இது தமிழினத்துக்குச் செய்த மாபெரும் துரோகம். மத்திய அரசைக் கேள்வி கேட்டால், அவர்கள் நமது கொள்ளையைத் தடுப்பார்கள்; நம் மீது வழக்குகள் பாயும் என்பதால் கைகட்டி வாய்பொத்தி அடிமைச் சேவகம் செய்து கொண்டு இருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்களையும் பற்றி சொன்னால் பல மணிநேரம் பிடிக்கும்.
அ.தி.மு.க. அரசில் அங்கம் வகிக்கக் கூடிய அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திர பாலாஜியைச் சொன்னால் போதும். ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது; ஒரு அமைச்சர் எப்படி இருக்கக் கூடாது; ஒரு மனிதர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் ராஜேந்திர பாலாஜி! எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, ஆளும் கட்சியினர் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே உயிருக்கு பயப்படக் கூடிய அளவுக்கு அராஜகம் கொடி கட்டிப் பறக்கும் மாவட்டமாக இந்த விருதுநகர் உள்ளது. வாயைத் திறந்தால், வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன், நாக்கை அறுப்பேன் என்பதுதான் ராஜேந்திர பாலாஜியின் பாணியாக உள்ளது.
ஜெயலலிதா இருந்திருந்தால் இவரை ஒரு நாள்கூட பதவியில் வைத்திருக்க மாட்டார். ஜெயலலிதா இறந்ததால், தன்னை எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் முழு சங்கியாகவே மாறி ராஜேந்திர பாலாஜி செயல்பட்டு வருகிறார். இன்றைய அதிமுகவுக்குள் பா.ஜ.க. அணி என்ற ஒன்று இருக்கிறது. அதில் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் போன்றவர்கள் முக்கிய ஆட்கள். பாஜக தன்னை எதுவும் செய்யாது என்ற தைரியத்தில்தான் ராஜேந்திரபாலாஜி இப்படி செயல்பட்டு வருகிறார். தினமும் மைக்கை பார்த்தால் ஏதாவது உளறும் ராஜேந்திர பாலாஜி, என்றைக்காவது தனது துறையைப் பற்றி பேசி இருக்கிறாரா என்றால் இல்லை.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திரபாலாஜி மீது நடந்து வருகிறது. ராஜபாளையம் தேவதானத்தில் 35 ஏக்கர் நிலமும், திருத்தங்கலில் இரண்டு வீட்டு மனைகளும், 75 செண்ட் நிலமும் வருமானத்துக்கு அதிகமாக 2011-13 காலக்கட்டத்தில் இவர் வாங்கியதாக திருத்தங்கல் மகேந்திரன் என்பவர் போட்ட வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கிறது. ஏழு கோடி மதிப்பிலான இந்த நிலத்தை ஒரு கோடி என்று கணக்கு காட்டியுள்ளார் ராஜேந்திரபாலாஜி என்பது குற்றச்சாட்டு. இதில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று இவர் போட்ட மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வந்தால் இன்றில்லாவிட்டாலும் திமுக ஆட்சி அமைந்ததும் புழல் வாசம் செய்யப்போகும் மனிதர்தான் ராஜேந்திர பாலாஜி என்பதை அவருக்கும் அதிமுகவினருக்கும் நினைவுபடுத்துகிறேன். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஓராண்டு தண்டனை கொடுத்தால் ராஜேந்திர பாலாஜி வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறேன்! ராஜேந்திர பாலாஜிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அடக்க முடியாது. திமுகவால்தான் அடக்க முடியும். மக்கள் சக்தியால்தான் அடக்க முடியும். அப்படி அடக்குவதற்கான தேர்தல்தான் வரப்போகிற சட்டமன்றத் தேர்தல்.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
 

click me!