
ஹாட்ரிக் வெற்றி பெற்ற திமுக
2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது திமுக. இதன் காரணமாக மகிழ்ச்சியின் உச்சத்தில் திமுக தலைமை உள்ளது. இந்தநிலையில் வட்ட செயலாளர், பகுதி செயலாளர் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது மனைவிகளை கவுன்சிலர்களாக வெற்றி பெற வைத்து நகர்மன்ற தலைவர்கள் அல்லது பேரூராட்சி தலைவர்களாக ஆக்கியுள்ளனர். இதன் காரணமாக ஒரே குடும்பத்தில் கட்சி மற்றும் ஆட்சி என இரு பதவிகளை கொண்டுள்ளனர். இதன் காரணமாக ஒரு சிலருக்கு பதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு பதவிகளை வகிப்பவர்களுக்கு மாற்றாக புதியவர்களுக்கு வாயப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.இதற்கான யோசனையை திமுக துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவருக்கு ஒரு பதவி
இதன் முதல்கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இரு பதவிகளை வைத்து இருப்பவர்களை ராஜினாமா செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆத்தூரில் அய்யம்பாளையம் பேரூர் செயலாளராக செயல்பட்டு வரும் ஐயப்பனை பதவியை ராஜினாமா செய்ய வைத்து தங்கராஜ் என்பவருக்கு பேரூர் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கன்னிவாடி பேரூர் செயலாளர் சண்முகத்தை ராஜினாமா செய்ய வைத்து விட்டு இவருக்கு பதிலாக இளங்கோவன் என்பவருக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல்கட்ட நடவடிக்கை தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை காரணமாக திமுக நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பதவி இல்லாதவர்களுக்கு பதவி கிடைக்கலாம் என்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.