அதற்கு தான் சபாவுக்கு ஸ்கெட்ச் போட்டோம்! திமுகவின் அந்தர் ஐடியா...

By sathish kFirst Published May 1, 2019, 10:08 AM IST
Highlights

ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததாக திமுக தரப்பில் தெரிவித்துள்ளார்.

ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததாக திமுக தரப்பில் தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் ஒரு வருடத்துக்கும் மேலாக தினகரன் ஆதரவாளர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கட்சிக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த பரிந்துரையைத் தொடர்ந்து, மூவருக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதையடுத்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கான மனுவை சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் திமுக தரப்பிலிருந்து ஆர்.எஸ்.பாரதி அளித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179ஆ பிரிவின்படி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து எதிர்க்கட்சித் தலைவர் அளித்த தீர்மானத்தைச் சட்டமன்றச் செயலாளரிடம் அளித்திருக்கிறோம். விதியின்படி சபாநாயகருக்கும் தீர்மானத்தின் நகல் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த 2017 செப்டம்பரில் கொறடா அளித்த புகாரின் பேரில் ஒரே மாதத்தில் 18 பேரை சஸ்பெண்ட் செய்தனர். அதே நேரத்தில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யாமல் அவர்களுக்குப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. 

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மேலும் 3 பேரை தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார். எனவே, இந்த ஜனநாயகப் படுகொலையைத் தட்டிக் கேட்கும் விதமாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்மொழியப்படும் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல, ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதாகவும்  தெரிவித்தார்.

click me!