திமுக நிர்வாகி தற்கொலை செய்தது ஏன்? ப.சிதம்பரம் வழக்கில் தொடர்பா? பரபரப்பு தகவல்கள் அம்பலம்..!

By vinoth kumarFirst Published Aug 29, 2019, 11:07 AM IST
Highlights

தற்கொலை செய்த டாக்டர் ஆனந்த், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ப.சிதம்பரத்தின் மீதான வழக்குகள் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், டாக்டரின் தற்கொலைக்கு இதில் தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பரமத்திவேலூர் அருகே துப்பாக்கியால் சுட்டு தி.மு.க. மாவட்ட நிர்வாகி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த செங்கப்பள்ளியைச் சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த் (49). இவர் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். மேலும், பரமத்தி வேலூரில் எஸ்எஸ்எம் என்ற மருத்துவமனையை, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்தார். இவரது மனைவி தமிழ்செல்வி (45). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் அபர்ணா (17). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, தனது தோட்டத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு டாக்டர் ஆனந்த் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதில், டாக்டர் ஆனந்த் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. இவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகள் உள்ளன. மருத்துவமனை தவிர பெட்ரோல் பங்க், அரிசி மண்டி போன்றவை நடத்தி வந்தார். விவசாய நிலங்களும் ஏராளமாக உள்ளன. இவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களை அழைத்து மாத சம்பளம் மற்றும் ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளார். மேலும் 3 நாட்கள் விடுமுறை என்றும் கூறி உள்ளார். அப்போது நர்சுகள், ஏன் முன்கூட்டியே சம்பளம் வழங்குகிறீர்கள் என கேட்டுள்ளனர்.

 

அதற்கு அவர் சில நாட்கள் நான் வெளியூர் செல்கிறேன். திரும்பி வர தாமதமாகும். அதனால் முன்னதாக சம்பளத்தை வழங்குவதாக கூறினார். இதனால் அவர் ஏற்கனவே தற்கொலை செய்ய முடிவெடுத்து உள்ளது தெரியவந்தது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் நண்பர்கள் சிலரிடம், இதுபற்றி தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது. 

தற்கொலை செய்த டாக்டர் ஆனந்த், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ப.சிதம்பரத்தின் மீதான வழக்குகள் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், டாக்டரின் தற்கொலைக்கு இதில் தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், மனைவி தமிழ்ச்செல்வியுடன், கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்த் மனமுடைந்ததாகவும் தெரிகிறது. இதனாலேயே, தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

click me!