பணப்பட்டுவாடா புகார்... திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 3, 2021, 11:30 AM IST
Highlights

குறிப்பாக நேற்று மட்டும் தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நேற்று மட்டும் தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் 12 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோக் அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்தி, கரூர் வேட்பாளர் செந்தில் பாலாஜி, திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை ஆகியோரது வீடுகளில் சோதனை நடைபெற்றது. 

அதேபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பருமான சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக வந்த புகார்களை அடுத்து 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கே.வி.கோட்டையில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணப்பட்டுவாடா செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


 

click me!