
உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக 500 கோடி ரூபாய் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்.14 ஆம் தேதி பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அண்ணாமலை திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்கள் முன்னிலையில் திமுகவினரின் ஊழல் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாசித்தார். அப்போது திமுக பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். இந்த நிலையில் DMK Files என்ற தலைப்பில் திமுக மீதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும், திமுக நிர்வாகிகள் மீதும் அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி., நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: கெஜ்ரிவால் சார்பில் யாரும் வாதாட வேண்டாம்... வழக்கறிஞர்களிடம் அஜய் மக்கன் வேண்டுகோள்!!
அதில், DMK Files என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் திமுக கட்சி மீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தீர்கள். திமுகவின் சில சொத்துகளின் மதிப்பை உயர்த்தி, தொடர்பில்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுக கட்சிக்கு மொத்தம் ரூ.1408.94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துகள் மற்றும் கடன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ரூ. 2000, இளைஞர்களுக்கு ரூ. 3000; கோலாரில் பிரச்சாரத்தை துவக்கிய ராகுல் காந்தி!
திமுகவினருக்குச் சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ. 3474.18 கோடி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மதிப்பு ரூ. 34,184.71 கோடி என்பது பொய்யானது. ஒருவர் திமுகவின் உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும், அவருக்குச் சொந்தமான சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது. புகாரில் தெரிவித்தது போல் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. சொத்து பட்டியல் வெளியீடு தொடர்பாக இணையதளத்தில் வெளியிட்ட விடியோவை நீக்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும். குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக ரூ.500 கோடியை தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.