தமிழில் பேசி விட்டு இங்க்லீஸில் கையெழுத்து... திமுக எம்.பிகளை குவாட்டர் கட்டிங்குடன் கிழித்தெடுக்கும் விமர்சனம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 20, 2019, 3:39 PM IST
Highlights

நேதாஜி எழுப்பிய ஜெய்ஹிந்த் கோஷத்தை இந்தி என குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி கொச்சைப்படுத்துவதா? என, திமுகவுக்கு அதிமுக நாளிதழான நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது. 
 

நேதாஜி எழுப்பிய ஜெய்ஹிந்த் கோஷத்தை இந்தி என குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி கொச்சைப்படுத்துவதா? என, திமுகவுக்கு அதிமுக நாளிதழான நமது அம்மா பதிலடி கொடுத்துள்ளது. 

அதிமுகவைச் சேர்ந்த ரவீந்திரநாத் குமார் மக்களவை உறுப்பினராக பதவியேற்றபோது, ஜெய் ஹிந்த் என முழக்கமிட்டதை சுட்டிக்காட்டி, திமுக தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பில் நமது அம்மா நாளிதழில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், வா, குவாட்டர் கட்டிங், ரெட்ஜெயண்ட் மூவீஸ், கிளைவுட் நைன், தி ரைசிங் சன் என்றெல்லாம் வெள்ளைக்கார மொழியில் படம் எடுத்து பத்திரிக்கையும் நடத்தும் கொள்ளைக்கார கம்பெனி ஏதோ ஒட்டு மொத்த தமிழுக்கு ஒப்பந்ததாரர்கள் போல ஊளையிடுகிறது. 

ஏதோ இவர்கள் தான் முதன் முதலில் தமிழில் பதவியேற்பு உறுதி மொழி மேற்கொண்ட புரட்சியாளர்களை போல தங்களை காட்டிக் கொண்டு ஊடகக் கூலிகளை வைத்து ஓர் உண்மைக்கு மாறான மாயையை உருவாக்க முயற்சிக்கின்றனர். பதவியேற்பின்போது தமிழ் வாழ்க என்ற திமுக எம்.பிக்கள் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டார்கள்.  

அட மூதேவிகளா இந்த தேசத்திற்கான விடுதலையை உதிரம் சிந்தி பெற்றிட வேண்டுமென உலகெங்கும் சென்று இந்திய தேசிய ராணுவத்தை தட்டியெழுப்பிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விடுதலை வேட்கையை வேகப்படுத்த உச்சரித்த ஒப்பில்லா வார்த்தைதான் ஜெய் ஹிந்த் என்பது. அதை இந்தி என்று குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி கொச்சைப்படுத்துவதும், குதர்க்கம் பேசுவதும் தேசத்தை நேசிக்காத தேசவிரோதிகளின் நரிச்செயல். 

இனம், மொழி, நதி, மாநில உரிமை ஆகியவற்றில் அதிமுக இம்மி அளவும் விட்டுக் கொடுக்காது என்றும், அதேநேரத்தில் இந்திய தேசியத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஒன்றுபட்டு தொண்டாற்றுவதில் கடுகளவும் தவறாது என்றும் நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது. தமிழ் பற்றாளர்கள் எனும் வேஷம் போடும் மு.க.ஸ்டாலினின் மகள் நடத்தும் பள்ளியில் இந்திக்குத் தான் முன்னுரிமை என்பதையும், மாணவர்கள் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் மறைக்க முடியுமா? 

அதுசரி திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஜெய்ஜவான், ஜெய் கிஷான் என்றெல்லாம் கோஷமிட்டாரே அதுக்காக காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை கருணாநிதி வகையறாக்கள் முறித்துக் கொண்டு விடுவார்களா? என நமது அம்மா நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.

click me!