சிறுபான்மையினரை பழித்து பேசுவதா..? ராஜேந்திர பாலாஜியை விளாசி தள்ளிய திமுக எம்.பி.!

By Asianet TamilFirst Published Oct 19, 2019, 10:53 PM IST
Highlights

அரசுக்கு வருவாய் வரி மூலம் கிடைக்கிறது. அந்த வரியை அனைத்துத் தரப்பு மக்களுடன் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் செலுத்துகிறார்கள். அப்படி சிறுபான்மையின சமூகத்தினர் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து சலுகைகளையும் - சம்பளத்தையும் பெற்று அனுபவிக்கும் ராஜேந்திர பாலாஜி, சிறுபான்மை மக்களைப் பற்றி கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
 

சிறுபான்மையினரைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் பதவி வகிக்கவே தகுதியற்றவர் என்று திமுக செய்தி தொடர்புச் செயலாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:


 “நாங்குநேரி தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைச் சந்தித்த அதிமுகவைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியத் தோழர், கோரிக்கை மனுவை வழங்கினார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இஸ்லாமிய மக்களிடம், “உங்களுக்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும்? நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீர்கள்; அதைப்போல, கிறிஸ்தவர்களும் வாக்களிக்க மாட்டார்கள். ஜமாத்தினர், பாதிரியார்கள் எங்களுக்கு வாக்களிக்க கூடாது என்று சொல்லியிருப்பார்கள். உங்களிடம் நான் மனுவை வாங்க மாட்டேன். உங்களையெல்லாம் காஷ்மீரில் செய்ததைப்போல ஒதுக்கி வைக்க வேண்டும்" என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கடுமையாகப் பேசியுள்ளார்.
இது போல அநாகரீகமாக, அருவருக்கத்தக்க வகையில், சிறுபான்மையினரைப் பற்றி பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் பதவி வகிக்கவே தகுதியற்றவர். அமைச்சர் என்ற முறையில் ராஜேந்திரபாலாஜி, அரசுப் பணத்தில் சம்பளம் பெறுகிறார்; பயணப்படி பெறுகிறார்; வாகன வசதி, வீட்டு வசதி ஆகியவற்றை அனுபவித்து வருகிறார். இவையெல்லாம் அரசுப் பணத்திலிருந்து வழங்கப்படுகிறது. அரசுக்கு வருவாய் வரி மூலம் கிடைக்கிறது. அந்த வரியை அனைத்துத் தரப்பு மக்களுடன் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் செலுத்துகிறார்கள். அப்படி சிறுபான்மையின சமூகத்தினர் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து சலுகைகளையும் - சம்பளத்தையும் பெற்று அனுபவிக்கும் ராஜேந்திர பாலாஜி, சிறுபான்மை மக்களைப் பற்றி கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.


சிறுபான்மை மக்களைப் பற்றி இப்படி பேசிய அவர் உடனடியாக  மன்னிப்பு கேட்க வேண்டும். இவர், அரசியலமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணத்தின்போது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறியுள்ளார். எனவே, ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவி வகிக்கவே தகுதியற்றவராகிறார். சிறுபான்மையினரை மிரட்டும் தொனியில் அவர் பேசியிருப்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அடிவருடியாக அவர் நடந்து கொள்வதையே காட்டுகிறது. 
தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைத்து மத மக்களும் நட்புடனும் நல்லுறவுடனும் சகோதரத்துவத்துடனும் பழகி வருகிறார்கள். ராஜேந்திர பாலாஜி போன்ற தகுதியற்றவர்கள், பதவிகளைப் பெறும்போது, இதுபோன்று சில்லறைத்தனமாகப் பேசி இந்த ஒற்றுமையை குலைக்க முயற்சிப்பது இழிவான செயல். ராஜேந்திரபாலாஜியின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

click me!