பாகிஸ்தானை இரண்டாக பிரிச்சது காங்கிரஸ்தானே: பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த கபில் சிபல்

By Selvanayagam PFirst Published Oct 19, 2019, 10:18 PM IST
Highlights

பாகிஸ்தானின் இரண்டாகப் பிரித்தது காங்கிரஸ்தான் என்று மக்களிடம் கண்டிப்பாகச் சொல்லுங்கள் என்று பிரதமர் மோடிக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
 

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடிஜிக்கு அரசியலமைப்பு 370 பிரிவு மட்டுமே நினைவில் இருக்கிறது. எப்போது பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது, யார் பிரித்தது என்பது குறித்து அவருக்குத் தெரியாது. காங்கிரஸ் கட்சிதான் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியை அதனிடம் இருந்து பிரித்தோம். அப்போது நீங்கள் எங்குச் சென்றீர்கள் மோடி?

பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த பகுதியை அதனிடம் இருந்து பிரித்தது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் என்று ஹரியானா மக்களிடம் சொல்லுங்கள். பாகிஸ்தானை இரண்டாகப் பிரித்ததற்காகவே காங்கிரஸ் கட்சியை புகழ வேண்டும், ஆனால், காங்கிரஸ் கட்சியை புகழ்வதற்கு உங்களுக்குத் துணிச்சல் கிடையாது.

அரசியலமைப்புச் சட்டம் 47 பிரிவைப் பிரதமர் மோடி அமல்படுத்த என்ன செய்துள்ளார். மக்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், சத்துணவின் தரத்தை அதிகரிப்பதும் ஒரு அரசின் கடமை.

ஆனால், உங்களுக்கு அரசியலமைப்பு 370பிரிவு மட்டும்தான் நினைவில் இருக்கிறது. ஆனால், அரசியலமைப்பு கடமைகளை உங்கள் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. 93 சதவீத குழந்தைகளுக்கு முறையான சத்துணவு கிடைக்கவில்லை.

ஆனால், உங்களின் கவனமும் முழுமையும் 370பிரிவில் மட்டுமே இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மட்டுமே இப்படி பேசுகிறீர்கள். மக்கள் துன்பப்படுவது குறித்து உங்களுக்குத் தெரியாது.

அரசியலமைப்பு 370 பிரிவு இருந்ததால்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சி பின்தங்கியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், மனிதவள மேம்பாடு குறியீட்டில் ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் வறுமை, சிசுமரணம், வேலையின்மை வீதம் ஆகியவை அதிகமாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் 370 பிரிவு இல்லையே. ஆனால், இந்த புள்ளிவிவரங்களோடு ஒப்பிடுகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிறப்பான வளர்ச்சியைத்தான் பெற்றிருந்தது.

பிரதமர் மோடி அரசியல் கவனம் செலுத்துவதைக் குறைத்துக் கொண்டு மக்களின் நலனில் அதிகமாகக் கவனத்தைத் திருப்ப வேண்டும்.

தேசத்தின் உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஆனால், நாட்டில் அனைத்தும் நலமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியுள்ள நாடு என்று கூறிவருகிறது.

இவ்வாறு கபில சிபில் தெரிவித்தார்
 

click me!