
கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதிமுக பொது செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். பின்னர், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒ.பி.எஸ். பிரிந்து சென்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்து மூத்த நிர்வாகி மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் மைத்ரேயன், பி.எச்.பாண்டியன் மற்றும் 12 எம்பிக்கள், சில எம்எல்ஏக்கள் உள்பட சசிகலாவிடம் இருந்து பிரிந்து ஒ.பி.எஸ். அணிக்கு சென்றனர்.
இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் ஆட்சி நடத்துவது ஸ்தம்பித்து நின்றது. அதிமுக இரு அணியாக உள்ளதால், மக்கள் யாருக்கு ஆதரவு தருவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட 4 பேருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா உள்பட 3பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையொட்டி சட்டமன்ற அதிமுக தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க அழைக்குமாறு, நேற்று மாலை கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கோரிக்கை வைத்தார். தற்போது, அதிமுகவில் 89 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். மற்றம் எம்எல்ஏக்கள், ஓ.பி.எஸ். அணியில் சேர்ந்துவிட்டனர்.
அதிமுகவில் 89 எம்எல்ஏக்கள் உள்ளதால், சட்டமன்றத்தில் முதலமைச்சர் யார் என்பதை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் எம்எல்ஏக்களை தங்கள் வசம் வைத்து கொள்ள, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். தரப்பினர் தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில் திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று சென்னை வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஆளுங்கட்சியில் பிளவு ஏற்பட்டு, ஆட்சி அமைப்பதில் வாக்கெடுப்பு நடக்கும் நிலையில், திமுக உறுப்பினர்களை சென்னைக்கு உடனடியாக வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.