#BREAKING திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது... சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 4, 2021, 7:15 PM IST
Highlights

நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோர உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க உள்ளது.  125 தொகுதிகளில் வென்றுள்ள திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக முதலமைச்சராக அரியணை ஏற உள்ளார். வரும் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல்வராக ஸ்டாலினும், 32 அமைச்சர்களும் பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைகோர உள்ள நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 125 திமுக எம்.எல்.ஏ.க்களும், உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற 8 கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பங்கேற்றுள்ளனர். 

சமூக இடைவெளியுடன், அனைவரும் முகக்கவசம் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை துரைமுருகன் முன்மொழிந்தார். இதனை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதை அடுத்து, மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலின் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!