முடிந்தால் நடவடிக்கை எடுங்கள்... பாஜக தலைவரைச் சந்தித்த பிறகு திமுக எம்எல்ஏ செல்வம் ஸ்டாலினுக்கு தில் சவால்!!

By Asianet TamilFirst Published Aug 4, 2020, 8:36 PM IST
Highlights

பாஜக தேசிய தலைவரைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம், இதற்காக ‘முடிந்தால் என் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும்’ என்று மு.க. ஸ்டாலினுக்கு சவால் விட்டுள்ளார்.

திடீரென டெல்லி சென்ற ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பாஜகவில் இணையப்போவதாக தகவல் பரவியது. இந்நிலையில் மாலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை கு.க. செல்வம் சந்தித்து பேசினார். அப்போது அவருடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் உடன் இருந்தார். இதன்பின்னர் கு.க.செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 “திமுகவில் உட்கட்சித் தேர்தலை மு.க. ஸ்டாலின் நடத்த வேண்டும். இந்தியாவில் பிரதமர் மோடி நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கிறார். அதற்கு இடையூராக இருக்கும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி சார்ந்த அனைவருடனும் தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலினுக்கு  கோரிக்கை விடுக்கிறேன். அயோத்தியில் நாளை நடைபெறவுள்ள ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ராமேஸ்வரத்தையும் அயோத்திக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். தமிழ் கடவுள் முருகனை இழிவாக பேசியவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்.
இதன்பின்னர் செய்தியாளர்கள், பாஜகவில் இணையவில்லையா என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த கு.க. செல்வம், “ நான் பாஜகவில் இணையவில்லை. தனது தொகுதியில் 2 மின்தூக்கிகளை அமைப்பதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசவே டெல்லி வந்தேன். தலைமைக்கு தெரியாமல் வந்ததாக உங்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கு.க. செல்வம்,  “முடிந்தால் என் மீது கட்சி நடவடிக்கை எடுக்கட்டும்” என்று தெரிவித்தார்.

 
சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை இளைஞரணியில் இருந்த சிற்றரசுக்கு அண்மையில் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இந்தப் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த கு.க. செல்வம், பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது.

 

click me!