அடுத்தடுத்து சிக்கும் திமுக அமைச்சர்கள்... அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரெய்டுகளுக்கு அமலாக்கத்துறை பதிலடி..?

By Thiraviaraj RMFirst Published Aug 19, 2021, 10:13 AM IST
Highlights

இந்த ரெய்டு குறித்து பாஜக முக்கிய தலைவர்களிடம் அதிமுக தலைமை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பின்னரே செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளை அமலாக்கத் துறையினர் தீவிரப்படுத்தினர்.

சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அதிமுக அமைச்சர்களும் பல கோடி ஊழல் செய்துள்ளதாகவும், திமுக ஆட்சி அமைந்ததும் அவர்களுக்கு எதிரான முறையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது  கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. இதனால் அதிமுக அமைச்சர்கள் மீது திமுக அரசால் நடவடிக்கை எடுக்க தாமதமானது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பின் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களைத் தூசி தட்டி நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது திமுக அரசு.

 

அதில் முதல் ஆளாக கடந்த சில வாரங்களுக்கு முன் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போதே இந்த ரெய்டுக்கு பின்னால் இருப்பவர் தற்போது மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார் எனக் கூறப்பட்டது. இந்த ரெய்டு நடந்து சில நாட்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் டெல்லிக்குச் சென்றனர். அப்போது இந்த ரெய்டு குறித்து பாஜக முக்கிய தலைவர்களிடம் அதிமுக தலைமை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பின்னரே செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகளை அமலாக்கத் துறையினர் தீவிரப்படுத்தினர். 

தி.மு.க., மின்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி, கடந்த 2011-15ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது 81 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டிற்கு உள்ளானார். இவ்வழக்கு பைசல் செய்யப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜி மீதான ஆவணங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆகஸ்ட்11ல் விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சட்டசபை கூட்டத்தொடர் காரணமாக பங்கேற்க இயலாது என வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பினார். செப்டம்பர்13க்கு பின் ஆஜராக சம்மன் அனுப்பப்பட உள்ளது. அடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர்.

இதற்கிடையே மற்றொரு தி.மு.க., அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மதுரை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 7 பேருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் வரை 7 நாட்கள் தனித்தனியாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

2001–2006 காலகட்டத்தில் அதிமுக தலைமையிலான அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 90 இலட்சம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.

இருப்பினும் லஞ்சஒழிப்பு போலீசார் சேகரித்த ஆவணங்கள் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவரும் சட்டசபை கூட்டத்தொடரை காரணம் காட்டி பங்கேற்க இயலவில்லை என தெரிவித்துள்ளார். இதுபோன்று தி.மு.க., அமைச்சர்கள் சிலரது வழக்குகளை அமலாக்கத்துறை துாசி தட்ட ஆரம்பித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு திமுக அரசு குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், அமலாக்கத்துறை மூலம் திமுக அமைச்சர்களின் வழக்குகள் தூசி தட்டப்பட்டு வருகின்றன. 

click me!