
சென்னையில் அமைச்சர் ஆவடி நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆவினில் தயாரிக்காத ஒரு பொருளை சுகாதாரத்துறை வாங்காமல் போனதால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக பொய்யான கருத்துக்களை தெரிவித்து உள்ளார். பால் வளத்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த சத்து மாவு என்றுதான் அறிவித்து இருந்தோம். ஆனால், அது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படும் என்றெல்லாம் தெரிவிக்கவில்லை” என்று ஆவடி நாசர் தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளிடம் பேசுகையில், “செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, இவ்வளவு காலம் பொறுமையாகப் பணி புரிந்த செவிலியர்கள் தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். எம். ஆர். பி. தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமே பணி நிரந்தரம் படிப்படியாக செய்து தரப்படும். அவர்களின் பட்டியலை அரசு தயாரித்து வருகிறது. ஒப்பந்த பணியாளர்களை எல்லாம் நிரந்தரம் செய்ய முடியாது. போராட்டம் செய்தால் அனைவருக்கும் பணி நிரந்தரம் கிடைக்கும் என யாரும் நினைக்க வேண்டாம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் யாருமே தற்போது வரை என்னிடம் எந்த மனுவையும் தரவில்லை. அதேவேளையில் பேச்சுவார்த்தைக்கு தயார்” என்று மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பால்வளத் துறை செயலாளர் ஜவஹர் கூறுகையில், “கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சத்து மாவை ஆவினில் தயாரிக்க முடியுமா என்ற ஆய்வு இரண்டு மாதங்களில் முடிவடையும். அந்த ஆய்வு பணிகள் முடிவடைந்த பிறகு ஆவின் நிறுவனத்துக்கு லாபம் ஏற்படும் எனத் தெரிந்தால் நிச்சயம் அந்தப் பொருளை உருவாக்குவோம்” என்று ஜவஹர் தெரிவித்தார்.