G Square : ஜி ஸ்கொயர் விவகாரத்தில் இதுதான் நடந்தது.. உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் முத்துசாமி !

By Raghupati RFirst Published Jun 8, 2022, 2:09 PM IST
Highlights

DMK Vs Annamalai : திமுக அரசில் நடந்துள்ள ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை தரப்பிடம் ஆதாரங்களுடன் புகார் தர இருக்கிறோம். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக நீதிமன்றத்தை நாடும்.

பாஜக தலைவர் அண்ணாமலை 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்துக்கள் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடந்திருக்கிறது.  இதில் 45 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் நியூட்ரிஷியன் கிட்டில் வழங்கப்படுகின்ற இரும்பு சத்து டானிக் வாங்குவதில் 32 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் 77 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று ஆதாரத்துடன் அந்த ஊழலை வெளியிட்டார்.

அப்போது அதுகுறித்து பேசிய அவர், ‘ திமுக அரசில் நடந்துள்ள ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை தரப்பிடம் ஆதாரங்களுடன் புகார் தர இருக்கிறோம். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக நீதிமன்றத்தை நாடும். நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறோம். அண்ணாநகர் கார்த்திக், திமுக ஆடிட்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் அதிகாரிகளை மிரட்டி ஆவின் பொருளுக்குப் பதிலாக தனியார் பொருளை சேர்க்க செய்திருக்கிறார்கள்.   இதன் மூலம் தான் அரசுக்கு 45 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.   ஆவினை காட்டிலும் தரம் குறைந்த தனியார் நிறுவன டெண்டரை நிறுத்த வேண்டும். 

திமுக ஊழல் பட்டியல்

ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக சிஎம்டிஏ மாறி இருக்கிறது  என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை,  பொதுவாக நிலம் அப்ரூவல் ஆக 200 நாட்கள் ஆகும். ஆனால், கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு எட்டு நாட்களிலேயே டிடிசிபி மத்திய,  அரசின் ரேரா உட்பட அனைத்து அனுமதியும் கிடைத்திருக்கிறது.  முதல்வரின் உறவினர்கள் பலரும் அமைப்புகளில் வந்துவிட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆன்லைன் மூலம் மட்டுமே நிலத்துக்கு அப்ரூவல் வழங்கப்படும் என்று அரசாணையை வெளியிட்டார்கள். எப்போதெல்லாம் ஜி ஸ்கொயர்  ஆவணங்களை சமர்ப்பிக்கிறார்களோ அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மட்டுமே இந்த லிங்க் ஓபன் ஆகும். 

அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் ஒரு மணி நேரத்தில் இந்த லிங் இயங்காது. ஜி ஸ்கொயர் க்கு மட்டுமே இந்த ஆன்லைன் லிங்க் இயங்குகிறது. ஜி ஸ்கொயர் பெயர் வெளியே தெரிய வந்ததால் 6 புதிய நிறுவனங்களை தொடங்கி இருக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி தான் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று கூறி பரபரப்பை கிளப்பினார் அண்ணாமலை. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசியஅமைச்சர் முத்துசாமி, ‘தமிழ்நாடு வீட்டு வசதித்துறை சார்பில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 30 நாட்கள் சோதனை முறையில் ஒற்றைச்சாரள முறையில் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

அமைச்சர் முத்துசாமி

பின்னர் மே மாதம் முதல் ஒற்றைச்சாரள சோதனையில் குறைகள் நிவர்த்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்னும் 2 மாதத்தில் சிஎம்டிஏ சம்பத்தப்பட்ட சேவைகள் மற்றும் அனுமதிகள் அனைத்தும் ஆன்லைனில் ஒற்றைச்சாரள முறையில் வழங்கப்படும். மக்களின் கால விரையத்தை குறைக்க அனுமதிகள் வழங்குவதில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 10 ஏக்கர் வரை லேஅவுட் ஒப்புதல்களை மாவட்ட அலுவலகளங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம். 5 ஏக்கர் வரை நகராட்சி அலுவலகங்களில் ஒப்புதல் வழங்கப்படும். 

40 ஆயிரம் சதுரடி வரையிலான கட்டுமான அனுமதிகள் மாவட்ட அலுவலகத்திலேயே வழங்கப்படும். துறைரீதியாக உள்ள காலிப்பணியிடங்கள் காரணமாக சேவைகள் வழங்க தாமதமாகிறது. காலிப்பணியிடங்கள் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணிகளை தாமதமானாலும் குறைகள் சொல்கின்றனர். விரைந்து முடித்தாலும் குறை கூறுகின்றனர். 37% காலிபணியிடங்கள் இருக்கும் போதும் பணிகள் துரிதமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. அண்ணாமலை சிஎம்ஏடிவில் மூன்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார். அண்ணாமலை கூறுவது போல் யாருக்கும் உடனடியாக அனுமதி வழங்கவில்லை. 

அவர் சொன்னதில் 90 % தேதிகள் பொய்யானதாக உள்ளது. ஜி ஸ்கொயர் பெயரில் சில விண்ணப்பங்கள் வந்துள்ளன.  சட்டப்படி அனைத்து அனுமதிகளும் தந்துள்ளோம். எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை, சிஇஓ பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டது போல குறை கூறுகிறார். ஆனால், இந்த பணியிடம் 1978ல் இருந்தே நடைமுறையில் உள்ளது. இதுவரை 46 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியில் இருந்துள்ளனர். இதேபோல் அண்ணாமலை புகார் எழுப்பியுள்ள கோவை விவகாரத்தில், சிவமாணிக்கம் என்பவர் 12.12.2019ல் விண்ணப்பித்துள்ளார். 21.08.2021ம் ஆண்டு அனுமதி கிடைத்துள்ளது. 

அண்ணாமலை மீது வழக்கு

சிவமாணிக்கத்திடம் ஜி ஸ்கொயர் வாங்கியிருக்கலாம். ஆனால் இதற்கான அனுமதி கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டது. ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அனைத்து நிறுவனங்களுக்கும் விதிகளின் படி அனுமதி வழங்கப்படுகிறது. திமுக ஆட்சியில் மிக விரைவாக அனுமதி அளித்ததுபோல அண்ணாமலை கூறுகிறார். அனுமதி அளிக்கப்பட்ட போது அதிமுக ஆட்சியே இருந்தது என்பதை கவனிக்க வேண்டும். விதிமுறைகள் பின்பற்றி அனுமதி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். 

சிஎம்டிஏவில் அண்ணாமலையையே அமர வைத்தாலும் எட்டு நாளில் அனுமதி கிடைக்காது. அண்ணாமலை ஏதாவது லேஅவுட் போட்டிருக்கிறாரா ?  அண்ணாமலைக்கு ஏதேனும் அனுமதி தேவைப்படுமெனில் உரிய அவனங்களுடன் விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும் . ஜி ஸ்கொயர் தவிர மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது தவறான குற்றச்சாட்டு.  அண்ணாமலை சரியான ஆதரங்களோடு பேசினால் நல்லது. சரியான விவரங்களை திருத்திக்கொள்ள தயார். ஆனால், உள்நோக்கத்தோடு தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பினால் வழக்கு தொடரப்படும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க : ”அந்த அரை போதை அரசியல் தலைவருக்கு சொல்கிறேன்..” அண்ணாமலையை மறைமுகமாக கலாய்த்த ஐ.லியோனி!

இதையும் படிங்க : கொரோனா இன்னும் முடியல.. மக்கள் உஷாரா இருக்கணும்.! எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

click me!