
துரைமுருகன் கண்டனம் :
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசு முறையான தரவுகளை நீதிமன்றத்தில் அளிக்கத் தவறியதால்தான், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அபாண்ட பழி சுமத்தியது கண்டிக்கத்தக்கது. அதிமுக ஆட்சி சட்டம் என்றாலும், வன்னியர் சமுதாயத்திற்கு அளித்த உள் இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த, திமுக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது. இது தீர்ப்பிலேயே இடம் பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி - சி.வி சண்முகம் :
அது கூட, முன்னாள் சட்ட அமைச்சர் சண்முகத்திற்கு தெரியவில்லை, பழனிசாமிக்கும் புரியவில்லை. முதல்வர் ஸ்டாலின், வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட, 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற நடத்திய சட்டப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதன் வழியாக, பழனிசாமியும், சண்முகமும் வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்கின்றனர் என்பது தான் உண்மை.
இட ஒதுக்கீட்டு பிரச்னை, உச்ச நீதிமன்றம் வரை போகும் அளவுக்கு, அலட்சியமாக செயல்பட்ட, இந்த இரட்டையர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கு, பழனிசாமி, சண்முகம் போன்றவர்கள் சமூக நீதி குறித்து வகுப்பு எடுக்க வேண்டாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, சட்ட வல்லுனர்களுடன் அரசு கலந்து ஆலோசிக்கும். நிச்சயம் வன்னியர் சமுதாயம் போற்றும் நல்ல முடிவை, உரிய நேரத்தில் எடுக்கும்' என்று கூறியுள்ளார்.