‘வேறெங்கெல்லாம் இப்படி நடந்துள்ளது என்று எனக்கு உடனடியாக லிஸ்ட் வேண்டும்’ என்று கேட்டுள்ளார் முதல்வர்
மிக அழகான வெள்ளை ஓவியத்தில் மிக சிறிய கருப்பு புள்ளி இருந்தாலும் அது சற்று உறுத்தலாக தான் தெரியும். அதே கதைதான் தி.மு.க.விலும் நடந்து வருகிறது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 95% வெற்றியை பெற்றுள்ளது அக்கூட்டணி. தி.மு.க. மட்டுமே தனித்து மிக மிக அமோகமான வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி பதவிகளில் சிலவற்றை கூட்டணி தர்மப்படி கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. போன்றவற்றுக்கு வழங்கினார் ஸ்டாலின். இது தொடர்பான தெளிவான அறிவிப்பும், அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் ‘நம் கழக ஆட்சியில் நாம் அந்த பதவியில் உட்காராமல், நம்மை ஒட்டிப் பிழைப்பவர்களுக்கு ஏன் அதை கொடுக்க வேண்டும்?’ என்று தி.மு.க.வினர் அதை கூட்டணியினருக்கு கொடுக்காமல் பல இடங்களில் முரண்டு செய்துவிட்டனர்.
undefined
பல இடங்களில் வாக்கெடுப்பு நடக்க வைத்து, அதில் வெற்றியும் பெற்று, கூட்டணி கட்சியினரை பதவியில் அமராமல் செய்துவிட்டனர். இந்த செயலை விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வன்மையாக கண்டித்தனர். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் வெளிப்படையான மன்னிப்பை, மன வருத்தத்தை கூட்டணி கட்சியினரிடம் தெரிவித்தார். மேலும் தலைமையின் உத்தரவை மீறி, கூட்டணி கட்சியினரின் வாய்ப்பை தட்டிப்பறித்த தி.மு.க.வினர் உடனடியாக அந்த பதவிகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்! எனவும் அறிவித்தார்.
சிலர் அதற்கு உடன்பட்டனர். பலரோ இன்னும் உடன்படவில்லை.
இந்த பஞ்சாயத்து ஒரு புறமிருக்கும் நிலையில், தி.மு.க.வில் அக்கட்சியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட கவுன்சிலர்களுக்கான பதவி வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. அதாவது பேரூராட்சி, நகராட்சிகளின் தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளில் சிலவற்றை தங்கள் கட்சியின் தலித் கவுன்சிலர்களுக்கு தி.மு.க. தலைவர் வழங்கி உத்தரவிட்டாராம். அதை அந்தந்த பகுதியின் ஆதிக்க சாதி தி.மு.க. நிர்வாகிகள் அமுக்கி, பறித்துவிட்டதாகவும் பஞ்சாயத்து வெடித்துள்ளது. குறிப்பாக கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சியின் துணைத்தலைவர் பதவி இப்படி ஆக்கப்பட்டுள்ளதாம்.
இந்த விவகாரம் தி.மு.க. தலைமைக்கு போக, அவர் ‘வேறெங்கெல்லாம் இப்படி நடந்துள்ளது என்று எனக்கு உடனடியாக லிஸ்ட் வேண்டும்’ என்று கேட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாய கவுன்சிலர்களின் உரிமைகளை பறித்த தன் கட்சியினர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் முதல்வர். விரைவில் நடவடிக்கை பாயலாமாம்!