ஆபாசப் பேச்சால் பெண்களிடம் செல்வாக்கை இழந்த திமுக... எம்.ஜி.ஆர். காட்டிய பொது நாகரிகம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 11, 2020, 3:34 PM IST
Highlights

இந்தப் பேச்சாளர்கள் அனைவருக்கும் 'எம்.ஜி.ஆர்.' மட்டுமே இலக்கு; அவருக்குப் பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான செல்வாக்கு, அவர்களைப் பாடாய்ப் படுத்தியது. 

1970களின் தொடக்கம். தமிழக அரசியல் மேடைகளில், அவதூறுகளும் ஆபாசங்களும் மிகுந்து இருந்த காலம். ஒரு குறிப்பிட்ட கட்சி, ஆபாசப் பேச்சாளர்களை அடுக்கடுக்காய் களம் இறக்கியது. இவர்களின் பேச்சுகளைக் கேட்டு ரசிப்பதற்கு என்றே  ஒரு பட்டாளம் எல்லா ஊர்களிலும் இருந்தது. 

என்ன ஒன்று... இவ்வகைப் பேச்சாளர்கள் வருகிறார்கள் என்றால், அன்றைக்கு, ஊரில் ஒரு பெண்மணி வீட்டை விட்டு வெளீயில் தலைகாட்ட முடியாது. முழுக்கவும் ஆண்களுக்கான அதிலும் ஆபாசத்தை ரசிக்கிற ஆண்களுக்கான கும்பல் மட்டும் மேடையைச் சுற்றி இருக்கும். இந்தப் பேச்சாளர்கள் அனைவருக்கும் 'எம்.ஜி.ஆர்.' மட்டுமே இலக்கு; அவருக்குப் பெண்கள் மத்தியில் இருந்த அபரிமிதமான செல்வாக்கு, அவர்களைப் பாடாய்ப் படுத்தியது. தங்களது ஆற்றாமையை ஆத்திரத்தை, கொச்சைப் பேச்சாக கூச்சம் இன்றிப் பரப்பினார்கள்.

 

தாய்க்குலத்துக்கு எம்.ஜி.ஆர். மீது இருந்த அளவிட முடியாத பாசம் ஒருபுறம்; அவருக்கு எதிராக இறக்கி விடப்பட்ட சிறப்புப் பேச்சாளர்களின் ஆபாசம் மறுபுறம். இந்த 'யுக்தி' (குயுக்தி) எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பிறகு, ஜெயலலிதா காலத்திலும் தொடர்ந்தது. இதனால் பெண்களின் ஓட்டு என்றைக்குமே 'எதிர்க் கட்சிக்கு' கிட்டாமலே போனது. இது ஒரு வகையில், அதிமுகவுக்கு எதிர்பாராமல் கிடைத்த 'போனஸ்'! இன்றளவும் அதிமுகவின் தீவிர ஆதரவாளர்களாகப் 
பெண்கள் இருப்பதற்கு எதிர் முகாமின் ஆபாசப் பிரச்சாரமும் ஒரு காரணம். 

சரி.. இத்தனை பேர் எம்.ஜி.ஆர். என்கிற தனி மனிதரைக் குறி வைத்துத் தாக்கினார்களே... இதற்கு எம்.ஜி.ஆர். தந்த பதில் என்ன..? ''பெயத்தக்க நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்'' என்கிறது உலகப் பொதுமறை. இதனை அப்படியே தனது வாழ்க்கையில் கடைப்பிடித்தார் மக்கள் திலகம். 

1972 அக்டோபர் 17 - அதிமுக தோன்றிய நாள் தொட்டு, 1987 டிசம்பர் 24 அன்று அமரர் ஆன நாள் வரையில், யாரைப் பற்றியும் அநாகரிகமாக ஒரு வார்த்தை கூட ஒரு நாளும் எம்.ஜி.ஆர். பேசியதே இல்லை. 1977 தமிழக சட்டசபைக்கான பொதுத் தேர்தலின் போது எம்.ஜி.ஆர். பேசிய பரப்புரை / விளக்கவுரை குறித்து ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம். அதற்கு இணையான தேர்தல் பிரச்சாரப் பேச்சு இன்றுவரை இல்லை. இது குறித்து விரிவாகப் பிறகு பார்ப்போம். 

தனக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்த கட்சித் தலைமை குறித்து தனது இந்த உரையில் எம்.ஜி.ஆர். கூறியது இவ்வளவுதான். 'நாநயம் இருந்தால் மட்டும் போதாது; நாணயம் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்'. பெயரைக் கூடக் குறிப்பிடவில்லை; 'நாநயம்', 'நாணயம்' என்று இரண்டு சொற்களை மட்டும் சொல்லி இருப்பார். எம்.ஜி.ஆர். யாரைக் குறித்து என்ன சொன்னார் என்று தமிழகத்தின் அடித்தட்டு மக்களுக்கு நன்றாகப் புரிந்து போனது. 

1977இல் அமோக வெற்றி பெற்று அரியணை ஏறினார் எம்.ஜி.ஆர். பதவி ஏற்பு முடிந்து, முதல் முறையாக முதல்வராக மக்கள் முன் உரையற்றினார்.சென்னையில் அண்ணா சிலை மேடையில் இருந்து அவர் பேசியதை மக்கள் திரண்டு வந்து கேட்டனர். அடுத்ததாக, 1980ஆம் ஆண்டு. எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி, ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் விரோதமாக, எம்.ஜி.ஆர். ஆட்சி, பிரிவு 356இன் கீழ் நீக்கப் பட்டது.

 
 
இன்று ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடுகிறவர்கள், மாநில உரிமை பற்றி மூச்சு விடாமல் முழங்குகிறவர்கள், மக்கள் தேர்ந்து எடுத்த மக்கள் திலகத்தின் ஆட்சியை 'டிஸ்மிஸ்' செய்தார்கள்.1977ஐ விடவும் மோசமாக, எம்.ஜி.ஆர். மீது, தனிப்பட்ட அவதுறுப் பிரச்சாரத்தை அள்ளி வீசியது பிரதான எதிர்க் கட்சி. எம்.ஜி.ஆர். சற்றும் கலங்கவில்லை. மக்களைச் சந்தித்து நியாயம் கேட்கிறேன் என்று கிளம்பி விட்டார். அப்போதும் தனக்கு எதிராக செயல்பட்ட சதிகாரர்களைக் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. 

'நான் செய்த தவறு என்ன..?' என் மீது தவறு இருந்தால் தண்டியுங்கள்... இல்லையேல், என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்'' என்று மட்டுமே சொல்லிச் சென்றார். மதுரை மேற்கு தொகுதியில் ஒரு பிரமாண்டமான 'போஸ்டர்'. 'என்ன தவறு செய்தேன்..?' என்கிற கேள்வியுடன், 'கொடுத்துச் சிவந்த கரம் கும்பிட்டுக் கேட்கிறது. வாக்களியுங்கள் இரட்டை இலைக்கே..' என்று கேட்டது. தமிழ்நாடு முழுக்க இதுதான் அதிமுகவின் பிரச்சாரமாக இருந்தது. 

அராஜகமாக ஆட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட போதும் கூட, தனது பேச்சில் நாகரிகத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடித்தார் எம்.ஜி.ஆர். மனம் நெகிழ்ந்து போன மக்கள் அமோக ஆதரவு நல்கி, முன்னினும் அதிக இடங்களைத் தந்து மகிழ்ந்தனர், இரண்டாவது முறையாக முதல்வர் ஆனார் பொறுப்பு ஏற்ற கையோடு, சென்னை அண்ணா சிலை அருகில் இருந்து உரையாற்றினார் எம்.ஜி.ஆர். பல லட்சம் மக்கள் திரண்டு வந்து கேட்டனர். அந்த மக்கள் கடலில் நானும் ஒருவன்!

காலத்தின் கோர விளையாட்டில், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப் பட்டார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். 1984 அக்டோபர் 31. அப்போது இந்தியப் பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி, தனது மெய்க் காப்பாளர்களால் சுடப்பட்டு மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மகன் ராஜிவ் காந்தி பிரதமர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். உடனடியாக, மக்களைவைக்குப் பொதுத் தேர்தலும் அறிவித்தார். அது சமயம் அதிமுகவும் முன்னதாகவே பொதுத் தேர்தலைச் சந்திக்க விரும்பி, தனது ஆட்சிக் காலத்தைக் குறுக்கிக் கொண்டு, மக்களவையுடன் மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வழி விட்டது. 

அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் படுத்து இருந்தார் எம்.ஜி.ஆர். இங்கே தமிழகத்தில் சட்டசபைக்கான பொதுத் தேர்தல்! அப்போதும் பிரதான எதிர்க் கட்சி நேர்மறை அரசியல் செய்ய முன் வரவில்லை. 'எம்.ஜி.ஆர். இறந்து விட்டார்' என்று பொய்ப் பிரச்சாரம் செய்தது. அதுமட்டுமல்ல; 'ஒருவேளை எம்.ஜி.ஆர். திரும்ப வந்தால், அவரிடமே ஆட்சியை ஒப்படைப்பேன்' என்றெல்லாம் 'வீர வசனம்' பேசினார்கள். இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, 'எதிரணி வேட்பாளர் வந்து விட்டால், அவரிடமே ஆட்சியைத் தந்து விடுவேன்' என்று வெட்கமே இல்லாமல் ஓட்டு கேட்ட கேலிக் கூத்து அரங்கேறியது

இதனை முறியடிக்க, மருத்துவ மனையில் இருந்தபடி, வீடியோவில் தோன்றினார் எம்.ஜி.ஆர் 'தலைவர் உடல் நலம் தேறி வருகிறார்; விரைவில் தமிழகம் திரும்பி முதல்வர் பொறுப்பு ஏற்பார்' என்று அப்போதைய கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெயலலிதா ஊர்ஊராகச் சென்று தீவிரப் பிரச்சாரம் செய்தார். மீண்டும் ஒருமுறை எதிர்க்கட்சியின் அவதூறுப் பொய்ப் பிரச்சாரம் முறியடிக்கப் பட்டது. மீண்டும் ஒருமுறை, முன்னை விடவும் அதிக இடங்கள் பெற்றது அதிமுக. மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர். 

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர்., பரங்கிமலை மைதானத்தில் பேசினார். இப்போதும், தலைவரைக் காண்பதற்காக மக்கள் வெள்ளம். அவர்களில் நானும் ஒருவன். தமிழ்நாட்டு மக்கள் தன் மீது வைத்த அபரிமிதமான அன்புக்கு கன்ணீர் மல்க நன்றி கூறினார், மற்றபடி, ஒரு வார்த்தை கூட யாரையும் சாடிப் பேசவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அரசியல் நாகரிகத்தில் உச்சம் தொட்டவர் அவர். தனது திரையுலக வாழ்க்கையின் பிற்காலத்தில், அவரைக் கடுமையாக எதிர்த்துப் பேசியவர்களில் ஒருவர் - கண்ணதாசன். மகாகவி பாரதிக்குப் பிறகு, தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்த மாபெரும் மக்கள் கவிஞன். 'கவியரசு' என்ற சொல்லுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்த தன்னிகரில்லாக் கவிஞன்.

 

தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். பொறுப்பு ஏற்ற பிறகு, அரசவைக் கவிஞராக யாரை நியமிக்கலாம் என்கிற கேள்வி எழுந்த போது, சற்றும் யோசிக்காமல் கவியரசர் கன்ணதாசன் மட்டுமே பொருத்தம் ஆனவர் என்று தீர்மானித்தார். அப்போது, பாடலாசிரியர் வாலி, தலைவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். தனது காரில் அவரை அழைத்துக் கொண்டு போன எம்.ஜி.ஆர். அவரிடமே இந்த யோசனையை சொன்னார். உடனடியாக முழு மனதுடன் ஆமோதித்தார் கவிஞர் வாலி.  

நன்றாகப் பாருங்கள். கண்ணதாசனுக்குப் பதவி தருவது மட்டுமல்ல; தன்னை நம்பி, தன்னுடன் நெருங்கி இருக்கிற கவிஞனுக்கும் மனவருத்தம் இருக்கக் கூடாது என்று எண்ணியவர் எம்.ஜி.ஆர்.  கவியரசு கன்ணதாசன் போன்ற ஒரு மாபெரும் யுகக் கவிஞனுக்கு அரசவைக் கவிஞர் என்கிற பதவி மிகச் சாதாரணம்தான். ஆனால் அன்னாருக்கு அப்பதவியை வழங்கியதன் மூலம், தமிழ் மொழியின் மீது தலைவருக்கு இருந்த தனியார்வம் நன்கு வெளிப்பட்டது. கூடவே அவரின் நாகரிக அணுகுமுறையும் நமக்குப் புரிந்தது.  பொது மேடையில் கடுஞ்சொல் உதிர்க்காத, புன்னகையை மட்டுமே வீசிச் சென்ற அந்த சரித்திரத் தலைவன், நிகழ்த்திக் காட்டிய மற்றொரு சாதனை - இந்திய ஜனநாயகத்தில் ஒரு முக்கிய மைல் கல். அது என்ன..? 

(வளரும்.

 
கட்டுரையாளர்- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.  

click me!