ஆளுநர் ஆர்.என்.ரவியை தரக்குறைவாகப் பேசிய குற்றச்சாட்டில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ஆளுநரை விமர்சித்த திமுக பேச்சாளர்
திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் தேர்வு, தமிழக சட்டம் ஒழுங்கு, ஆன்லைன் சூதாட்ட மசோதா போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆளுநரின் செயல்பாடுகளை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர். அடுத்த கட்டமாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தான் சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக கடந்த ஜனவரி மாதம் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது. இந்த வீடியோவில் ஆளுநரை மிரட்டும் வகையிலும், எச்சரிக்கை செய்யும் வகையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேசியது தெரியவந்தது.
ஆளுநர் செயலாளர் புகார்
இதனையடுத்து ஆளுநரின் துணைச் செயலாளர் எஸ். பிரசன்ன ராமசாமி, திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகாரை அளித்தார். அதில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அவதூறாகவும், இழிவாகவும், மிரட்டக்கூடிய வகையிலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். இது சட்டப்பிரிவு 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடிய (குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பிரிவு) குற்றம். இந்தப் பிரிவின் கீழும் பொருந்தக்கூடிய மற்ற பிரிவுகளின் கீழும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஒழுங்கு நடவடிக்கை ரத்து
இதன் தொடர்ச்சியாக சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திமுகவில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். தனது பேச்சுக்கு சிவாஜி கிருஷ்ண மூர்த்தி வருத்தம் தெரிவித்ததால் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த திட்டம்..! ஸ்டாலினுடன் முக்கிய ஆலோசனை நடத்திய சிபிஎம் தலைவர்கள்