அப்பாவையே மறந்த மு.க.ஸ்டாலின்... மக்களை மறக்க மாட்டாரா? எகிறியடிக்கும் எதிர்கட்சிகள்..!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 1, 2021, 2:58 PM IST
Highlights

பதவி ஆசையில் கட்சியை வளர்ந்த கலைஞரையே ஓரங்கட்டிவிட்டு, நான், நான் மட்டும் தான் இனி திமுக என்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயலும் ஸ்டாலினால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

‘வெற்றி நடை போடும் தமிழகமே’ விளம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலைப்படுத்தப்படுவதாகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அதிமுக வாய் திறக்கவில்லை என்றும் வாய்க்கு வந்தபடி பச்சை பொய்களை அவிழ்த்துவிட்டு வந்த திமுக தலைவர் ஸ்டாலினின் முகமூடியை சோசியல் மீடியாக்களில் மக்கள் கிழித்து வருகின்றனர். பாஜகவினர் மத்தியிலும், மாநிலத்திலும் பிரதமர் மோடி அரசு செய்துள்ள நலத்திட்டங்களை சொல்லி  வாக்கு சேகரித்து வருகின்றனர். மாநிலத்தில் அதிமுகவினர் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தே நிறைவேற்றப்பட்ட மக்கள் நலம் காக்கும் திட்டங்களையும் மேற்கொள் காட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர். 

ஆனால் திமுகவிற்காக வேலை பார்க்கும் சில சோசியல் மீடியா குழுக்களோ மோடி, அமித் ஷாவின் பெயர் இல்லாமல் பாஜக பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், ஜெயலலிதாவை வைத்து வாக்கு சேகரிப்பதாகவும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேசமயத்தில்  திமுக தலைவர் என்ற பதவியில் அமர்வதற்கு முன்பு வரை ‘நான் கலைஞர் மகன் பொய் பேசமாட்டேன்’ என பிரகடனப்படுத்தி வந்த ஸ்டாலின், வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கருணாநிதியின் பெயரை  பெரிதாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

‘ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு’என விளம்பரம் செய்து வரும் ஸ்டாலின். தன்னுடைய தந்தையும், அண்ணா ஆரம்பித்த திமுகவை கட்டிக்காத்தவருமான கருணாநிதியின் பெயரை எத்தனை முறை பிரச்சாரங்களில் பயன்படுத்தியிருக்கிறார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை போல் சிறப்பான ஆட்சி அமைப்பேன் என எத்தனை முறை பேசியிருக்கிறார் என்பது மிகப்பெரிய கேள்வி குறியாக அமைந்துள்ளது. அப்பாவிற்கு அடுத்து மகன், தாத்தாவை தொடர்ந்து பேரன் என வாரிசு அரசியல் செய்து வரும் திமுக, தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக, அதிமுக தங்களுடைய தலைவர்களை மறந்துவிட்டார்கள், மறைக்கிறார்கள் என்றெல்லாம் பேசுவது வேதனையின் உச்சம். 

 

பதவி ஆசையில் கட்சியை வளர்ந்த கலைஞரையே ஓரங்கட்டிவிட்டு, நான், நான் மட்டும் தான் இனி திமுக என்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயலும் ஸ்டாலினால் மக்களுக்கு எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இன்று திமுக சார்பில் பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தில் அதிமுக, பாஜக குறித்து திமுக முன்னெடுத்துள்ள பொய் பிரச்சாரம் அக்கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, தமிழகத்தை தட்ஷிண பிரதேஷ் என பெயர் மாற்றப்படும் போன்ற போலியான சித்திரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. நேற்று உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்களில் கூட தக்‌ஷிண பிரதேசத்திற்கு வருகை தரும் யோகி ஆதித்தியநாத்தை வரவேற்பதாக போட்டோ ஷூப் போஸ்டர்கள் வெளியானது பரபரப்பைக் கிளப்பியது. 

வடமாநிலத்தவரை அரசியல் ஆலோசனைக்காக அழைத்து வந்த ஸ்டாலின் தமிழகர்கள் வேலை குறித்து பேசுவது வேடிக்கையானது என விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதேபோல் பாஜக தமிழகத்தின் பெயரை தட்ஷிண பிரதேஷ் என பெயர் மாற்ற உள்ளதாக பொய்யான பிரச்சாரத்தை ஸ்டாலின் மற்றும் அவருடைய கூட்டணி கட்சியினர் கையில் எடுத்துள்ளதையும் எதிர்க்கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளன.  

click me!