ஒரே மாதத்தில் கலைஞரை மறந்த தி.மு.க.வினர்! போஸ்டரில் போட்டோ மிஸ்ஸிங்!

By vinoth kumarFirst Published Sep 19, 2018, 11:28 AM IST
Highlights

தி.மு.க தலைவர் கலைஞரின் புகைப்படம் இல்லாமல் அக்கட்சியினர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர் கலைஞரின் புகைப்படம் இல்லாமல் அக்கட்சியினர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரை ஆரம்ப காலம் தொட்டே ஒரு பாரம்பரியம் உண்டு. பொதுவாக போஸ்டர்களில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் படங்கள் கட்டாயம் இடம்பெறும். அதிலும் கலைஞர் இருக்கும் போது தி.மு.க சார்பில் வைக்கப்படும் பேனர்கள் மற்றும்  அடிக்கப்படும் போஸ்டர்களில் கட்டாயம் அண்ணாவின் புகைப்படம் இருக்க வேண்டும். 

இதனை தொடர்ந்து ஸ்டாலின் கட்சியின் முக்கியப் பதவியை பெற்ற பிறகு, கலைஞர் இல்லாமல் போஸ்டர் அடிக்கப்படுவதில்லை.   ஆனால் தற்போது திருவாரூரில் தி.மு.கவினர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர்களில் கருணாநிதியின் புகைப்படம் இல்லை. தி.மு.க முதன்மைச் செயலாளராக கடந்த வாரம் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டார். இதற்கு நன்றி தெரிவித்து திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.கவினர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

 

 அதாவது பாலுவை முதன்மைச் செயலாளராக நியமித்த ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போஸ்டரில் ஸ்டாம்ப் அளவு கூட கலைஞரின் புகைப்படம் இல்லை. ஆனால் ஸ்டாலின் புகைப்படத்தை பெரிதாகவும் அதற்கு இணையாக டி.ஆர்.பாலு புகைப்படத்தையும் வைத்துள்ளனர். 

மேலும் மாவட்டச் செயலாளர் என்ற வகையில் பூண்டி கலைவாணன், அவரது அண்ணன் பூண்டி கலைச்செல்வன் ஆகியோரின் புகைப்படங்கள் எல்லாம் அந்த போஸ்டரில் உள்ளது.  ஏன் அண்ணா, பெரியார் புகைப்படங்கள் கூட ஸ்டாம்ப் சைசில் உள்ளன. இந்த போஸ்டரை பார்த்த மு.க.அழகிரி மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் எடுத்து வெளியிட்டு ஒரு கேள்வியும் கேட்டுள்ளார். 

அதாவது கலைஞர் எங்கே? என்பது தான் அந்த கேள்வி. இது குறித்து திருவாரூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகளை கேட்ட போது வேண்டும் என்றே கலைஞரின் புகைப்படத்தை இக்னோர் செய்யவில்லை என்றும், தவறு நடந்துவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் கலைஞர் புகைப்படம் இல்லாமல் போஸ்டர் அடித்த நிர்வாகிகளுக்கு பதவி பறிபோவது உறுதி என்று பேசப்படுகிறது.

click me!