
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவில் இருந்து விலகிய ஆனந்தராஜ் ஜெ மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் விலக விசாரணை கமிஷ்ன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா பொதுச்செயலாளராகவும் ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும் பதவியேற்றனர். இதையடுத்து சசிகலா சட்டமன்ற குழு தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இதைதொடர்ந்து அதிமுக நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் அனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் சசிகலா குடும்பத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளை விமர்சித்தும் வந்தார்.
இந்நிலையில், இன்று நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
அதிமுகவின் உள்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலுக்கு முன் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் பொதுமக்களுக்கு மிகுந்த சந்தேகம் இருக்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மக்களுக்கு 1000 கேள்விகள் உள்ளன.
எனவே விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
கட்சியும் ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் கையில் சென்றுவிட கூடாது.
ஒரு குடும்பத்திற்கு கட்டுப்பட்டு 122 எம்.எல்.ஏக்களும் வாக்களித்துள்ளனர்.
மக்களின் எண்ணத்திற்கு மாறாக எம்.எல்.ஏக்கள் வாக்களித்துள்ளனர்.
சசிகலாவிற்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்களின் உறவினர்களுக்கு மட்டுமே அரசு டெண்டர் வழங்கபடுகின்றன.
குடும்ப ஆட்சி இருக்காது என டி.டி.வி சொல்வதை எப்படி ஏற்று கொள்வது.
தொண்டர்கள் விரும்புவர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
திட்டங்களை செய்துவிட்டால் மக்கள் அனைத்தையும் மறந்து விடுவார்கள் என ஆட்சியில் இருக்கிறவர்கள் நம்புகிறார்கள்.
அதிமுகவில் பிளவு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
திமுக தனது தார்மீக கடமையை செய்து வருகிறது.
இவ்வாறு ஆனந்தராஜ் பேசினார்.