
தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதை விட பெரிய பிரச்னையாக வெடித்திருக்கிறது விஜயதாரணி விவகாரம். எதிர்கட்சியான காங்கிரஸை சேர்ந்த அவர், இந்த உருவப்பட திறப்பை வரவேற்றதோடு, சபாநாயகர் தனபாலுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுமிருக்கிறார்.
விஜயதாரணியின் இந்த செயல் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்குள் புது குண்டை போட்டிருக்கிறது. ஜெயலலிதா படத்திறப்பு விஷயத்தை மக்கள் மன்றத்தில் ‘மாண்புமிகு சபையில் அக்யூஸ்ட் நம்பர் 1-ன் உருவப்படமா?’ என்று வீரியமாக கொண்டு சென்ற ஸ்டாலினுக்கு, விஜயதாரணியின் செயல் கடும் கடுப்பை கிளப்பியிருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் தாறுமாறாக டென்ஷனாகியிருக்கிறார்.
இந்நிலையில் இந்த பஞ்சாயத்துகள் குறித்துப் பேசியிருக்கும் விஜயதாரணி, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்பட திறப்பை நான் வரவேற்றதில் என்ன தவறை கண்டுவிட்டார்கள்?!
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை, குற்றவாளி! என்று குன்ஹா தீர்ப்பளிக்கிறார். ஆனால் அவர் குற்றவாளி அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் விடுவிக்கிறது. இதை எதிர்த்தோர் மேல்முறையீடு சென்ற நிலையில், ஜெயலலிதா மரணித்துவிட்டார். அவர் இறக்கும்போது ‘நான் குற்றவாளி அல்ல!’ எனும் எண்ணத்துடன் தான் மறைகிறார். என்னதான் மேல் முறையீடு தீர்ப்பு அவருக்கு எதிராக வந்திருந்தாலும் கூட, மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யும் வாய்ப்பு இல்லாமல் அவரது மரணம் செய்துவிடுகிறது. ஆக உயர்நீதிமன்றம் ஒன்றினால் ‘நிரபராதி’ என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இறந்து போன ஒருவரை எப்படி குற்றவாளியாக பார்க்க முடியும்?
நான் வரம்பு மீறி பேசுவதாக திருநாவுக்கரசர் கூறுகிறார். அப்படி என்ன வரம்பு மீறி பேசிவிட்டேன்? சில உண்மைகளை கூறவா? ஜெயலலிதா முதல்வராவதற்கு திருநாவுக்கரசரும் ஒரு காரணம். தன் வீட்டில் வாஜ்பாய், ஜெயலலிதா ஆகியோரின் போட்டோக்களை மாட்டி வைத்திருக்கிறார். விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்றுதான் சொன்னார்களே தவிர, வாழ்த்து தெரிவிக்க கூடாது! என்று தலைமை ஒன்றும் கட்டளையிடவில்லையே. வாழ்த்தியது எனது தனிப்பட்ட கருத்து. அதிலிருந்து என்னை பின்வாங்க சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது.
விஜயதாரணியை எதிர்த்து கருப்பு கொடி காண்பிப்போம் என்று கோயமுத்தூரில் உள்ல தி.மு.க. நிர்வாகிகள் அழுத்தம் தந்தார்களாம், அதனால் என்னை அங்கே சென்று பேருந்து கட்டண உயர்வு ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் எங்கள் தலைமை தடுத்துவிட்டதாக எனக்கு தகவல்.
நான் கேட்கிறேன்! அடுத்தவர்களின் அழுத்தத்திற்கு நாம் ஏன் அடிபணிய வேண்டும்? நாட்டில் தி.மு.க. மட்டுமா கட்சி நடத்துகிறது? என் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்க தி.மு.க.வினர் நினைத்தால் நேரிலேயே அதை செய்ய வேண்டிதானே! இவர்கள் கருப்பு கொடி காட்டுவோம் என்று சொன்னதற்காக என்னை பொது நிகழ்வில் கலக்க விடாமல் தடுத்தது என்ன அரசியல்?” என்று விளாசி தள்ளியிருக்கிறார்.
தி.மு.க.வின் கூட்டணியை விஜயதாரணி போன்ற சில காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் விரும்பவில்லை என்று சில நாட்களாக தகவல்கள் கசிகின்றன. இப்போது ‘நாட்டில் தி.மு.க. மட்டுமே கட்சியா?’ என்று சொல்லியிருப்பதன் மூலம், கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக ஏன் இவர்களிடம் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்!? என்று விஜயதாரணி நேரடியாகவே கூட்டணி மீது குண்டுவீசி விட்டார்! என்கிறார்கள்.