
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கிண்டியில் திமுக சார்பில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்தது.
இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராட்டங்கள் வலுத்துவருகின்றன. சென்னை விமான நிலையத்தில் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய தமிழக கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை சேர்ந்த பாரதிராஜா, அமீர், ராம், வெற்றிமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே சென்னை வந்த பிரதமர் மோடி, திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கிவைத்து கலந்துகொண்டுவிட்டு, அடுத்ததாக சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் வைரவிழாவில் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக சார்பில், மோடியே.. திரும்பி போங்க.. என்ற ஆங்கில வாக்கியம் அடங்கிய ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. திமுக சார்பில் நடத்தப்பட்ட இந்த பலூன் பறக்கவிடும் போராட்டத்தில் மா.சுப்பிரமணியன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.