
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியை ஆராய, திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட் தொகையைக்கூட வாங்க முடியாமல் திமுக படுதோல்வியைத் தழுவியது. இதில், வேட்பாளர் மருதுகணேஷுக்கு திமுகவினரின் வாக்குகளே விழவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தேர்தல் பணியை திமுகவினர் சரிவர செய்யாததால் இந்த தோல்வி ஏற்பட்டிருப்பதாக மு.க.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், திமுகவின் உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். மேலும், பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, பெரியசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்பட பலர் இதில் பங்கேற்க உள்ளனர்.
இதனிடையே, தோல்வி குறித்து ஆராய சட்டப்பேரவை கொறடா சக்கரபாணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு டிசம்பர் 31 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.