துரைமுருகன் கலகம் அதிமுகவுக்கு நன்மையில் முடிந்தது!

By Asianet TamilFirst Published Mar 11, 2019, 10:42 AM IST
Highlights

கூட்டணி உடன்பாடுக்கு பிறகு, ‘இக்கூட்டணி ஏற்படாமல் இருக்க சிலர் சதி செய்தார்கள். ஆனால், நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது’ என்று பிரேமலதா தெரிவித்தார். உண்மையில் துரைமுருகன் கலகம் அதிமுகவுக்குதான் நன்மையில் முடிந்திருக்கிறது. 

அதிமுக கூட்டணியில் தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம்  அதிமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்திருக்கிறது திமுக.
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு கடந்த ஜனவரி முதலே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இக்கட்சிகளுடன் அதிமுக தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்த வேளையில் பாமகவுக்கு 7+1 எனத் தொகுதிகள் ஒதுக்கி அதிமுக உடன்பாடு கண்டது. இது தேமுதிகவுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது. பாமகவுக்கு வழங்கியது போல தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக பிடிவாதம் காட்டியது.
தேமுதிகவுடன் மத்திய அமைச்சர் ஓ.பன்னீசெல்வமும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. இதற்கிடையே விஜயகாந்தை ஸ்டாலின் சந்தித்த பிறகு தேமுதிகவுக்கு மவுசு கூடியது. தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுகவும் முயற்சி மேற்கொள்வதாகத் தகவல் வெளியானது. ஸ்டாலின் சந்திப்பை  தேமுதிகவும் பயன்படுத்திக்கொண்டது. ‘ஸ்டாலின் சந்திப்பில் அரசியல் உண்டு’ என்று பிரேமலதா பேசி, அதிமுகவுக்கு நெருக்கடிக் கொடுத்தார்.
பாமகவுக்கு இணையாக தொகுதிகள் வாங்குவதில் தேமுதிக தொடர்ந்து பிடிவாதம் காட்டிவந்தது. அதேவேளையில் தேமுதிகவுக்காக காத்திருப்பதாகக் கூறப்பட்ட திமுகவு முடித்தது. அதனால் தேமுதிகவுக்கு அதிமுக மட்டுமே ஒரே வாய்ப்பு என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், கேட்ட தொகுதிகளை வழங்க அதிமுக முன்வராததால்,  தொகுதி பங்கீட்டை முடித்துவிட்ட திமுகவை தேமுதிக அணுகியது. அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனை தேமுதிக நிர்வாகிகள் சந்தித்துபேசி அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தினர்.
அதேவேளையில் சுதிஷ் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். துரைமுருகனுடனான

 சந்திப்பை செய்தியாளர்களுக்கு திமுக கசியவிட்டதன்மூலம் அழகாக காய் நகர்த்தி தேமுதிகவை தர்மசங்கடத்துக்குள் தள்ளியது. ஒரே நேரத்தில் அதிமுக - திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது வெளிப்பட்டதால், அதிமுக தரப்பு கடும் கோபம் அடைந்தது. தேமுதிக வந்தால் வரட்டும் என்று பேசும் அளவுக்கு அதிமுக அமைச்சர்களை தள்ளியது.
ஒரு பக்கம் திமுகவை அணுகி கதவு மூட்டப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் இணைவது மட்டுமே தேமுதிக முன் ஒரே வாய்ப்பாக நிலைமை மாறியது. பேர அரசியலை நடத்தியதாகக் கூறி தேமுதிகவை பலரும் விமர்சனம் செய்ததால், அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. வேறு வழி இல்லாமல் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தும் நிலையும் தேமுதிகவுக்கு ஏற்பட்டது.
ஆனால், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு மீண்டும் அதிமுகவிடம் வந்ததால், பிடி முழுவதும் அதிமுகவிடமே சென்றுவிட்டது. தொடக்கத்தில் தேமுதிகவுக்கு 3 தொகுதிகளிலிருந்துதான் அதிமுக பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. தற்போது நீ...ண்ட இழுபறி, பேர அரசியல் அவப்பெயர் என பல தர்மசங்கடங்களுக்குப் பிறகு 4 தொகுதிகளை மட்டுமே பெற்று அதிமுகவுடன் உடன்பாடு கண்டுள்ளது  தேமுதிக. இதற்கு மாறாக முன்கூட்டியே இதே அளவு தொகுதிகளுக்கு தேமுதிக உடன்பாடு கண்டிருந்தால் அவப்பெயர்களும் பின்னடைவுகளையும் அக்கட்சி தவிர்த்திருக்கலாம்.


கூட்டணி உடன்பாடுக்கு பிறகு, ‘இக்கூட்டணி ஏற்படாமல் இருக்க சிலர் சதி செய்தார்கள். ஆனால், நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது’ என்று பிரேமலதா தெரிவித்தார். உண்மையில் துரைமுருகன் கலகம் அதிமுகவுக்குதான் நன்மையில் முடிந்திருக்கிறது. அன்று தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வந்ததை துரைமுருகன் வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், இன்று அதிமுக 4 தொகுதிகளுக்கு தேமுதிகவுடன் உடன்பாடு கண்டிருக்குமா என்பதும், தேமுதிகவும் இந்த தொகுதிகளுக்கு உடன்பாடு காண இறங்கிவந்திருக்குமா என்பதும் மில்லியன் டாலர் கேள்வி!

click me!