பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் காரணமாகவும், ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதன் காரணமாகவும், கட்டடம் இடிந்து விழுவதன் காரணமாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 இலட்சம் ரூபாய்தான் நிவாரண உதவி வழங்குகிறது.
நிவாரண உதவியினை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கோயில் திருவிழாக்களில் மின்சார கசிவு காரணமாகவும், பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ விபத்து காரணமாகவும், வன விலங்குகள் தாக்குதல் காரணமாகவும், நீரில் மூழ்கியும், கள்ளச் சாராயம் அருந்துவதன் காரணமாகவும் தினம் தினம் தமிழ்நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு உயிரிழப்போர் அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு உடனுக்குடன் வழங்கப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை.
undefined
அண்மையில், கள்ளச்சாராயம் உட் கொண்டதன் காரணமாக விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 22-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு 50,000 ரூபாயும் அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதும், அதனை அருந்துவதும் சட்டத்திற்கு எதிரான செயல் என்றாலும், அந்தக் குடும்பங்களின் ஏழ்மை நிலைமையைக் கருதி அரசு சார்பில் பத்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் தவறு ஒன்றுமில்லை. அதே சமயத்தில், இந்த உயிரிழப்புகளுக்கு காரணமானவர்களிடமிருந்தும், கள்ளச் சாராய விற்பனைக்கு உறுதுணையாக இருந்தவர்களிடமிருந்தும் இழப்பீட்டுத் தொகையை அரசு வசூலிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கள்ளச் சாராயம் அருந்தியதன் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிய தி.மு.க. அரசு, பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் காரணமாகவும், ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதன் காரணமாகவும், கட்டடம் இடிந்து விழுவதன் காரணமாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 இலட்சம் ரூபாய்தான் நிவாரண உதவி வழங்குகிறது.
இதேபோன்று, சாலை விபத்துகள் காரணமாகவும், நீரில் மூழ்கியதன் காரணமாகவும், நெரிசலில் சிக்கியதன் காரணமாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய்தான் அரசு நிவாரணமாக வழங்குகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலம், கடலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ஒரு இலட்சம் ரூபாய்தான் நிவாரணமாக வழங்கப்பட்டு இருக்கிறது. மின்சாரம் தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாய்தான் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு செய்திக் குறிப்பு எண். 649 நாள் 5-4-2023-ல் தெரிவிக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாகியும், நிவாரண உதவி பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கு ஏற்ப, இன்னும் எத்தனை குடும்பங்களுக்கு நிவாரண உதவி சென்றடையவில்லையோ!
ஐந்து நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரில் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது, திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவி ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். உயிர் என்பது விலை மதிப்பற்றது என்பதால், நிவாரண உதவி வழங்குவதிலே பாரபட்சம் காட்டுவதும், ஒரு சிலருக்கு குறைவான நிவாரண உதவியை வழங்குவதும், ஒரு சிலருக்கு நிவாரண உதவியை காலந்தாழ்த்தி வழங்குவதும், ஒரு சிலருக்கு நிவாரண உதவி வழங்காமல் இருப்பதும் ஏற்புடையதல்ல. மாறாக கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, எதிர்பாராதவிதமாக உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி குறித்தும், அதனை உடனுக்குடன் வழங்குவது குறித்தும் வழிமுறைகளை வகுத்து அதன் அடிப்படையில் நிவாரண உதவியினை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.