திமுக நண்பர்கள் பிரதமர் மோடியை தாமதமாகப் புரிந்திருக்கிறார்கள்... நட்புக்கரம் நீட்டும் அண்ணாமலை..!

By Thiraviaraj RMFirst Published Jan 5, 2022, 10:57 AM IST
Highlights

பிரதமர் மோடி, திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, எப்படி தமிழகம் மீது அக்கறையுடன் இருந்தாரோ இப்போதும் அக்கறையுடனேயே இருக்கிறார். அவர் மாறவில்லை. திமுகதான் மாறியுள்ளது.
 

“கால்கள் தேய்ந்தாலும் பரவாயில்லை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்வோம். போர்வையோடு புறப்படுகிறோம்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்தநாள் விழாவை, பாஜகவினர் நல்லாட்சி தினமாகக் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், “தமிழகத்தில் 1 மெகா வாட் சோலார் யூனிட் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இங்குள்ளவர்கள் கல்லா கட்டும் வேலையைத்தான் முக்கியமாகச் செய்கின்றனர்.

வரும் 13, 14-ம் தேதி மதுரையில் தங்கப் போகிறோம். இதேபோல தமிழகம் முழுதும் உள்ள கிராமங்களில் பாஜகவினர் தங்கி அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். கால்கள் தேய்ந்தாலும் பரவாயில்லை, போர்வையுடன் புறப்படுகிறோம். கிராமம் கிராமமாகச் செல்லப் போகிறோம்,

பிரதமர் மோடி ஒருநாளும் பிக்னிக் செல்வதாக நினைத்து தமிழகம் வரவில்லை. நம் பெருமையான மகாபலிபுரத்தை உலகத்திற்கே காட்டினார். ஆவடி வந்து பீரங்கி டாங்கியை அர்பணித்தார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரியை திறந்துவைத்தார். இப்படி தமிழக நலன்களுக்காக ஒவ்வொருமுறையும் வரும் பிரதமரை சம்பந்தமே இல்லாமல் எதிர்கட்சியாக இருக்கும்போது கறுப்பு பலூன் விட்டு திமுக எதிர்த்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் வரவேற்பதை தமிழக நலன்மீது அக்கறை வந்திருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது தமிழக மக்களின் நலனுக்காக என்பதை திமுகவினர் புரிந்துகொண்டுவிட்டார்கள். பிரதமர் மோடி, திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, எப்படி தமிழகம் மீது அக்கறையுடன் இருந்தாரோ இப்போதும் அக்கறையுடனேயே இருக்கிறார். அவர் மாறவில்லை. திமுகதான் மாறியுள்ளது.

முதல்வர் மு.க ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோர் ’கோ பேக் மோடி’ என்று ட்விட்டரில் பதிவிட்டார்கள். ஆனால், அவர் முதல்வர் ஆனவுடன் பிரதமர் வாழ்த்து சொன்னார். பார்க்கவேண்டும் என்றவுடன் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்தார். தமிழகத்தில் மழை வந்தவுடன் ’என்னப் பண்ணவேண்டும்’ என்று தொடர்புகொள்கிறார். மாற்றாந்தாய் மனப்பான்மை எப்போதும் பிரதமருக்கு கிடையாது. அவர், தமிழக மக்களைத்தான் நேசிக்கிறார். அரசியல்வாதிகளை அல்ல. தமிழகத்திற்கு கொடுக்கத்தான் வருகிறார். எடுக்க வரவில்லை என்பதை திமுக நண்பர்கள் தாமதமாகப் புரிந்திருக்கிறார்கள். இந்துத்துவா என்பது அனைத்து மக்களையும் ஒன்றாக இணைக்கும் கருவி. இதில், இஸ்லாமிய, கிறிஸ்துவ சகோதரர்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம். புரிதல் இல்லாமல் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஏன் எதிர்த்தார்கள்?அண்ணாமலையை எதிர்த்துவிட்டுப் போகட்டும். பிரதமரை ஏன் எதிர்க்கவேண்டும்? இவர்கள் அரசியலுக்காக எப்படி வேண்டுமென்றாலும் பேசட்டும். ஆனால், நாங்கள் எங்கள் இலக்கில் தெளிவாக இருக்கிறோம். ” என்று பேசினார்.

போகிக்கும் பொங்கலுக்கும் மதுரையில் தங்கியிருந்து ‘மோடி பொங்கல்’ கொண்டாடிய பிறகு, தமிழக கிராமங்களுக்கு நடந்தே செல்ல இருக்கும் அண்ணாமலை, மத்திய அரசு தமிழகத்துக்கு இதுவரை அளித்துள்ள திட்டங்கள் குறித்த பட்டியலை கையில் எடுத்துச்செல்ல இருக்கிறாராம். குளிருக்குப் பாதுகாப்பாக போர்வையோடு செல்லும் இவர், ‘மாநில அரசின் செயல்திட்டங்களில் எத்தனை மத்திய அரசின் திட்டங்கள் என்பதை மக்களிடம் எடுத்துச்சொல்லி, தமிழக மக்களின் கவனத்தை பாஜகவின் பக்கம் திருப்பிக் காட்டுகிறேன்’ என்றும் சொல்லியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

click me!