DMK: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. புலம்பி தவிக்கும் கூட்டணி கட்சிகள்.. விளையாட்டு காட்டும் பிக்பாஸ் திமுக.!

By Asianet TamilFirst Published Jan 5, 2022, 10:17 AM IST
Highlights

தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொடர்ந்து எகிறி வரும் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தலுக்காக வேகமாக ஆயத்தமாகி வருகின்றன. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலே இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்து வருவதால் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் உள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் தொடர்ந்து எகிறி வரும் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தலுக்காக வேகமாக ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளன. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

 மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளுக்கும் திமுகவில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன என்று அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள். விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் நேர்க்காணல் வரை செய்து வேட்பாளர்களை மாவட்டச் செயலாளர்கள் பட்டியலிட்டு வருகின்றனர் என்கிறார்கள் திமுகவில். இதனால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பல மாவட்டங்களில் கதி கலங்கி நிற்கின்றன. கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இத்தனை சதவீத இடங்கள் என்று மேல் மட்ட தலைவர்கள் பேசி முடிவு செய்துவிடுவார்கள். எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது என்பதை மாவட்ட அளவில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பேசி விடுவார்கள்.

ஆனால், இந்த முறை திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு இத்தனை சதவீத இடங்கள் என்று எதுவும் ஒதுக்கவில்லை. மாவட்ட அளவில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கும்படி திமுக கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாவட்டங்களில் இதுவரை அப்படியான பேச்சுவார்த்தை எதுவும் தொடங்கவில்லை என்று கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. அதேவேளையில் திமுகவினர் வேட்பாளர்களை பட்டியலிட்டு வருவதால் கூட்டணி கட்சிகள் கதி கலங்கியும் உள்ளன. ‘ இந்த மாநகராட்சியில் உங்களுக்கு இத்தனை வார்டுகள், இந்தந்த வார்டுகள் என்று ஒதுக்கிவிட்டால், நாங்களும் வேட்பாளர் குறித்து சிந்தித்து வைப்போம். அதற்கான வாய்ப்பை திமுக இன்னும் வழங்கவில்லை’ என்று புலம்புகிறார்கள் திமுக கூட்டணி கட்சியினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர்.

இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் விசாரித்தபோது, “இதுவரை எந்தெந்த வார்டுகள் என எதுவும் திமுக மாவட்டச் செயலாளர்கள் சொல்லவில்லை. மாறாக, சில மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களை முடிவு செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக அணுகினால், எல்லா வார்டுகளுக்கும் வேட்பாளர்களை ரெடி செய்திருக்கிறோம் என்கிறார்கள். கடைசி வரை இழுத்தடிப்பதே அவர்களுடைய எண்ணம். எத்தனை வார்டுகளாக இருந்தாலும், அதை அறிவித்துவிட்டால், நாங்களும் தயாராவோம். மாறாக, வேட்பாளரை தயார் செய்து, கடைசியில் அவருக்கு கொடுக்காமல், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால், அந்த வேட்பாளர் அதிருப்தியடைந்து தனித்து போட்டியிடுவார்.

இதுபோன்ற சூழலை உருவாக்கவே திமுகவினர் இவ்வாறு செய்கிறார்கள். ஒரு வேளை கடைசி கட்டத்தில் மகளிர் எஸ்.சி. தனி வார்டை ஒதுக்கினால், அந்த நேரத்தில் வேட்பாளருக்கு எங்கே போவோம். காங்கிரஸ் தலைவர்கள் தாங்களும் தங்கள் வாரிசுகளும் எம்.பி., எம்.எல்.ஏ. ஆனால் போதும் என்று நினைக்கிறார்கள். கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு பொறுப்பு வாங்கி தர வேண்டும் என்ற எண்ணம் தலைவர்களுக்குக் கிடையாது. இதுதொடர்பாக திமுக தலைமையிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச வேண்டும்” என்று அங்கலாய்க்கிறார்கள் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கதர்ச் சட்டைக்காரர்கள். காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்ல விசிக, இடதுசாரிகளிலும் இப்படியான புலம்பல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

click me!