Jai Bhim: உலகத்தை திரும்பி பார்க்க வைத்த ஜெய் பீம்.. பாராட்டு விழா நடத்தி பாமகவை எச்சரித்த CPIM..!

By vinoth kumarFirst Published Jan 5, 2022, 9:31 AM IST
Highlights

ஜெய் பீம் திரைப்படம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளதாக பாராட்டினார். இதுபோன்ற படங்களுக்கு எதிர்காலத்தில் எதிர்ப்பு வந்தால்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப்போராட்டம் நடத்த தயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெய் பீம் போன்ற திரைப்படங்களுக்கு வருங்காலத்தில் எதிர்ப்புகள் வந்தால் போராட தயங்கமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான  இத்திரைப்படம் ஜெய்பீம், பழங்குடியின மக்கள் காவல் துறையின் அடக்குமுறையால் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. பழங்குடியினர் சமூகத்தின் அவலத்தைப்  பேசிய இப்படத்தின் மூலம்  தமிழக அரசின் பார்வை அம்மக்களின் மீது  திரும்பியுள்ளது. பல ஆண்டுகளாக சாதி சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்காக அம்மக்கள் போராடி வரும் நிலையில்  அவர்களுக்கு உடனே சான்றுகளை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிட வசதி உள்ளிட்டவைகள்  குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. 

மொத்தத்தில் பழங்குடியின மக்களுக்கு விடியலை ஏற்படுத்திய திரைப்படமாக ஜெய்பீம் அமைந்துள்ளது. அதே நேரத்தில் இத்திரைப்படத்தில் குறிப்பிட்டு தங்கள் சமூகம் இழிவுபடுத்த பட்டிருப்பதாகவும், தங்கள் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு திட்டமிட்டே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறி பாமக, வன்னியர் சங்கம் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், படத்தின் இயக்குனர்  மற்றும் நடிகர் தயாரிப்பாளருமான சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டுமென போராடி வந்தனர்.  நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் நடத்திய போராட்டம் பெரும் விவாதப் பொருளாக மாறியது. சூர்யாவுக்கு எதிராக பாமக குரல் கொடுத்து வந்தாலும், அதே நேரத்தில் அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வந்தன. இந்த காட்சிகள் இடம் பெற்றது தொடர்பாக படத்தின் இயக்குனர் தா.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்தார். அப்படி இருந்த போதிலும் இந்த பிரச்சனை ஓயவில்லை.

இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்தின் கலைஞர்கள், கள போராளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், அந்த படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர்கள் மற்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஜெய் பீம் படக்குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. அப்போது, பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்;- ஜெய் பீம் திரைப்படம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளதாக பாராட்டினார். இதுபோன்ற படங்களுக்கு எதிர்காலத்தில் எதிர்ப்பு வந்தால்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப்போராட்டம் நடத்த தயங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும், இந்த படத்திறகு எந்தவிதமான விருதுகளும் அறிவிக்கக் கூடாது என பாமகவினர் பகிர்ந்த முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெய் பீம் திரைப்படத்திற்கு பாராட்டு விழா நடத்தியிருப்பது பாமகவினரை கொதிப்படைய செய்துள்ளது.

click me!