திமுகவில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல்... யாரைக் கண்டிப்பார் மு.க.ஸ்டாலின்..?

By Thiraviaraj RMFirst Published Feb 15, 2021, 11:29 AM IST
Highlights

திமுக ஆட்சியில் இல்லாத இந்த பத்தாண்டு காலத்தில் கட்சி நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவழித்தவர் நேரு மட்டுமே. இதனால்தான் தலைமை அவருக்கு உரிய கௌரவத்தை வழங்கி வருகிறது. 

சொந்த அண்ணன் மு.க.அழகிரியைக்கூட சமாதானம் செய்துவைக்க முடியாமல் தடுமாறி வரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு இப்போது பெரும் பிரச்னையாக உருமாறி இருப்பது திருச்சி நகர உள்கட்சிப் பிரச்னைதான். திருச்சியில் முதன்மை செயலாளர் கே.என் நேருவுக்கும், தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இடையே வெட்டுக்குத்து நடக்காத குறைதான். அந்தளவிற்கு இரு தரப்பினரும் முறுக்கிக் கொண்டு நிற்கிறார்கள்.

திமுக நிர்வாகிகளில் அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரமாக நேரு இருந்து வருகிறார். மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்துவதில் இவர் கில்லாடி. இதனாலேயே முதன்மை செயலாளர் பதவி அளிக்கப்பட்டு மற்ற நிர்வாகிகளை விட அவருக்கு கூடுதல் முக்கியத்துவமும் தரப்படுகிறது.

இது, நேருவை விட மூத்த நிர்வாகிகள் பலரிடமும் புகைச்சலை ஏற்படுத்தி இருந்தாலும் மகேஷ் அன்கோவிற்கு தாங்க முடியாத எரிச்சலை உருவாக்கியுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு மிக நெருக்கமானவரான மகேஷ் இது பற்றி அவரிடம் பலமுறை முறையிட்டிருக்கிறார். ஆனாலும் தலைவரை கையைக் காட்டி அவர் நழுவியிருக்கிறார். இந்தநிலையில்தான் திருச்சியில் மாநாடு நடத்தத் திட்டமிட்டு அதற்கான பொறுப்பை நேரு வசம் ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். நேருவும் தனது பாணியில் மாநாட்டு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதில் மகேஷ் சுத்தமாக ஓரங்கட்டப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது,‘’திருச்சி திமுகவில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த நேருவுக்கு மகேஷின் வருகை சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் ஆரம்பம் முதலே அவரை புறக்கணித்து வந்தார். மாநாட்டு பணிகளில் மகேஷை ஒப்புக்குக் கூட சேர்க்கவில்லை. சேர்த்தால் அவருக்கும் பெயர் கிடைத்துவிடும் என்கிற நேருவின் எண்ணம்தான் இதற்குக் காரணம். காசு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற மமதையுடன் செயல்பட்டு வரும் நேருவுக்கு மகேஷ் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். தலைமையுடன் நெருக்கமானவர் என்பதால் மிகுந்த நிதானத்தை கடைபிடித்து வருகிறார். ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா!’’ என கொந்தளித்தனர்.

அதேநேரம் இது பற்றி நேரு ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது, ‘’திமுக ஆட்சியில் இல்லாத இந்த பத்தாண்டு காலத்தில் கட்சி நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவழித்தவர் நேரு மட்டுமே. இதனால்தான் தலைமை அவருக்கு உரிய கௌரவத்தை வழங்கி வருகிறது. இதைப் பார்த்து வெறும் கையால் முழம் போடுபவர்கள் எரிச்சல் பட்டால் என்ன செய்ய முடியும்? கட்சி மாநாட்டு பணிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளரை வெற்றிலை பாக்கு வைத்தா அழைக்க முடியும்? தலைமைக்கு நேருவை பற்றி, அவரது உழைப்பை பற்றி நன்றாகத் தெரியும். நேரு முன்பு மகேஷ் எல்லாம் செல்லாக் காசுதான்’’ என்றார்கள்.

click me!