தே.மு.தி.க மீது பார்வையை திருப்பும் தி.மு.க..! கூட்டணி வியூகத்தில் புதிய திருப்பம்!

By Selva KathirFirst Published Feb 15, 2019, 10:04 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில் தே.மு.தி.க.வை பாராமுகமாக இருந்த தி.மு.க தற்போது அந்த கட்சியின் மீது தனது பார்வையை திருப்பி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி விவகாரத்தில் தே.மு.தி.க.வை பாராமுகமாக இருந்த தி.மு.க தற்போது அந்த கட்சியின் மீது தனது பார்வையை திருப்பி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு தே.மு.தி.கவை உருவாக்கினார் விஜயகாந்த். அதன் பிறகு 2006, 2009 தேர்தல்களில் தனித்து களம் இறங்கி தனது கட்சிக்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு இருப்பதை நிரூபித்துக் காட்சினார். இதனால் 2011 தேர்தலில் தே.மு.தி.கவின் கெஞ்சி கூத்தாடி கூட்டணி வைத்தது அ.தி.மு.க. இதன் மூலம் வெற்றி பெற்ற பிறகு தே.மு.தி.க – அ.தி.மு.க இடையே மோதல் மூண்டது. 

அப்போது ஆரம்பித்தது விஜயகாந்திற்கு இறங்குமுகம். அன்று முதல் தற்போது வரை விஜயகாந்த் அரசியலில் வெற்றிக்கனி என்பதை ருசிக்கவே இல்லை. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டையில் படுதோல்வி அடைந்தார். மற்ற வேட்பாளர்களும் அதள பாதாளத்திற்கு சென்றனர். இதன் மூலம் தே.மு.தி.கவின் வாக்கு வங்கி 5 சதவீதமாக குறைந்துவிட்டதாக பேச்சு எழுந்தது. எனவே தற்போதைய கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தே.மு.தி.கவை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. 

வழக்கமாக கூட்டணி என்றால் மற்ற கட்சிகள் தான் தங்களை தேடி வர வேண்டும் என்பது தே.மு.தி.க ஸ்டைல். ஆனால் இந்த முறை தே.மு.தி.கவே ஒவ்வொரு கட்சியின் கதவாக தட்ட ஆரம்பித்தது. முதலில் திறந்தது அ.தி.மு.க தான். அங்கு 2 சீட்டுகள் தான் பிடிவாதமாக கூறிவிட்டதால், தினகரனுடன் சுதீஷ் பேசிப் பார்த்தார். அங்கும் பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்தது. 

இந்த நிலையில் தான் கனிமொழி மூலமாக தி.மு.கவை அணுகியது சுதீஷ் தரப்பு. காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இதே நேரத்தில் தமிழகத்தில் தே.மு.தி.க வாக்கு வங்கி அதாவது விஜயகாந்த் ரசிகர்கள் 5 முதல் 7 சதவீதம் அப்படியே உள்ளனர் என்கிற ஒரு சர்வே ரிப்போர்ட் ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தான் தே.மு.தி.கவை கூட்டணியில் சேர்க்கலாம் என்கிற ஒரு பேச்சு தி.மு.கவில் அடிபட ஆரம்பித்துள்ளது. அதிலும் தி.மு.க ஐ.டி விங்கை கவனித்து வரும் சுனில் தே.மு.தி.க நிச்சயமாக கூட்டணிக்கு வர வேண்டும் என்று சபரீசனிடம் லாபி செய்து வருவதாக சொல்கிறார்கள். 

ஆனால் ஸ்டாலினோ காங்கிரஸ் போதும், நாம் கொடுக்கும் தொகுதிகளை வாங்கினால் ம.தி.மு.க., வி.சி.கவை வைத்துக் கொள்ளலாம். மனித நேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லீம் லீக்கையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தால் போதும் என்று கூறி வருவதாக  சொல்கிறார்கள். இருந்தாலும் 7 சதவீத வாக்கு என்கிற சர்வே ஸ்டாலினை நிச்சயம் யோசிக்க வைக்கும் என்று நம்புகிறார்கள் அவருடன் உள்ளவர்கள்.

click me!