முதலில் ஆர்.எஸ் பாரதி.. இப்போது தயாநிதியா? திமுகவை வெளுத்து வாங்கிய வழக்கறிஞர்..!

By Manikandan S R SFirst Published May 16, 2020, 9:57 AM IST
Highlights

நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா? மூன்றாம் தர மக்களா? என கேள்வி கேட்கும் தயாநிதி மாறன் போன்றவர்கள் ஏன் எங்கள் மக்களிடம் ஓட்டுக் கேட்டு வருகிறீர்கள்? இனி பட்டியல் வகுப்பினர் யாரும் இதுபோன்ற சாதிய வன்மம் கொண்ட திமுகவில் பதவி வகிக்காதீர்கள். அக்கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து ஒருவர் இங்கு ஆட்சிப் பொறுப்பிற்கு வர வேண்டும்.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் அவதிக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர். திமுக சார்பாக ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் அறிமுகபடுத்தப்பட்டு தமிழகம் முழுவதும் நிவாரணப்பணிகள் நடந்து வருகிறது. அத்திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து 1 லட்சம் மனுக்கள் பெற்ற திமுக தலைமை அவற்றை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி ஆகியோர் மூலம் தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தை சந்தித்து வழங்க அனுப்பியிருந்தது. தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்த போது அவர்  தங்களை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.

அதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன்  “தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தரம் மக்களை போல நடத்தினார். நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவரது அறையில் தொலைக்காட்சிப் பெட்டி அலறுகிறது. தொலைக்காட்சி சத்தத்தை கூட அவர் குறைக்காமல் எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் நடந்துகொண்டார். திமுக தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தைப் பார்த்து அவர் பொறாமைப்படுகிறார்”  என்று கூறியிருந்தார். அதை மறுத்த தலைமை செயலளார் சண்முகம் நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமனின் பேட்டியை குறிப்பெடுத்து கொண்டிருந்ததாக கூறினார்.

நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா? என தயாநிதி மாறன் கூறியிருப்பது தான் தற்போது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதனிடையே தயாநிதி மாறன் பேசியதற்கு எதிராக புரட்சி பாரதம் கட்சி சார்பாக ஒருங்கிணைந்த முகநூல் போராட்டம்  நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய வழக்கறிஞர் சவிதா முனுசாமி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் பணியில் திமுக தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் பேசியதாவது: முதலில் திமுகவின் ஆர்.எஸ் பாரதி, தலித் மக்களுக்கு நீதிபதி பதவி அளித்து திமுக பிச்சையிட்டது என பேசினார். தற்போது தயாநிதி மாறன் அதே பாணியில் இழிவுபடுத்தி இருக்கிறார். இதை பேசிய தயாநிதி மாறனே வர்ணாசிரம அடிப்படையில் உயர்வகுப்பு கிடையாது. வர்ணாசிரம கோட்பாடுகளை ஏற்காமல் அதிலிருந்து வெளியே இருக்கும் தலித் மக்களை குறிப்பிட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் என பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா? மூன்றாம் தர மக்களா? என கேள்வி கேட்கும் தயாநிதி மாறன் போன்றவர்கள் ஏன் எங்கள் மக்களிடம் ஓட்டுக் கேட்டு வருகிறீர்கள்? இனி பட்டியல் வகுப்பினர் யாரும் இதுபோன்ற சாதிய வன்மம் கொண்ட திமுகவில் பதவி வகிக்காதீர்கள். அக்கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து ஒருவர் இங்கு ஆட்சிப் பொறுப்பிற்கு வர வேண்டும். அதற்காக பட்டியலின மக்கள் மட்டுமே ஓட்டு போட வேண்டுமென கூறவில்லை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனது ஆட்சியை பட்டியலின மக்களின் ஆட்சி எனக் கூறியே நமது வாக்குகளை அறுவடை செய்து வந்தார். அதுபோன்ற தந்திரம் கூட தற்போதைய திமுகவில் இல்லை. நேரடியாகவே இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செயலின் மூலம் தலித் மக்களை இழிவுபடுத்தியிருந்தார்.

ஊரடங்கு நேரத்திலும் தலித் மக்கள் மீது வன்முறைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதை தட்டிக்கேட்க வேண்டிய மக்கள் பிரதிகள் பட்டியலின மக்களை கொச்சைப் படுத்தி வருகின்றனர். அவர்கள் இன்னும் அதிகம் பேச வேண்டும். அப்போது தான் எங்கள் மக்களிடம் உங்களைப் போன்றவர்களை அம்பலப்படுத்த முடியும். இனி பட்டியலின மக்களின் வாக்கு திமுகவிற்கு விழாது. தயாநிதி மாறன் பகிரங்க மன்னிப்பு கேட்பதோடு மட்டுமில்லாமல் தலித் மக்களின் வாக்குகள் பெற்று வென்ற தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இனியும் தலித் மக்கள் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது. இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

click me!