தயாநிதியை திமுகவில் இருந்து நீக்க வேண்டும்..! பாஜக கோரிக்கை..!

By Manikandan S R SFirst Published May 16, 2020, 7:44 AM IST
Highlights

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநி என்றுக்கூட தெரியாமல் தாழ்த்தப்பட்ட மக்களை இவ்வாறு இழிவுப்படுத்தி பேசியிருப்பது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை கொதிப்படைய செய்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட சமூக மக்களை மதிப்பதாக இருந்தால், தயாநிதி மாறனை திமுகவில் இருந்து நீக்க வேண்டும். 

தாழ்த்தப்பட்ட மக்களை மதிப்பதாக இருந்தால் தயாநிதிமாறனை திமுகவிலிருந்து நீக்க வேண்டும் என ஒசூரில் பாஜக மாநில செயலாளர் நரேந்திரன் பேட்டி அளித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பாக தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு திமுக எம்பி தயாநிதி மாறன் அளித்த பேட்டியில், தங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை போல தலைமை செயலாளர் சண்முகம் நடத்தியதாக பேசியிருந்தார். இது பல்வேறு விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில் தமிழக பாஜக சார்பில் திமுக எம்பி தயாநிதிமாறனை கைது செய்யக்கோரி மாநிலம் முழுவதும் காவல்நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நகர போலீசில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பாஜக மாநில செயலாளர் நரேந்திரன் தலைமையில் தயாநிதிமாறனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நரேந்திரன் கூறியதாவது:  தலைமை செயலாளர் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை நடத்தியது போல் தங்களை நடத்தியதாக தயாநிதிமாறன் பேசியிருப்பது, அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அவ்வாறு தான் நடத்துகிறார்களா? என்கிற கேள்வி எழுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநி என்றுக்கூட தெரியாமல் இவ்வாறு இழிவுப்படுத்தி பேசியிருப்பது, தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை கொதிப்படைய செய்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட சமூக மக்களை மதிப்பதாக இருந்தால், தயாநிதி மாறனை திமுகவில் இருந்து நீக்க வேண்டும். தயாநிதி மாறன் இதற்கு முன்பாக தமிழக முதல்வர், பாரத பிரதமார் என்றுக்கூட பாராமல் பிச்சைக்காரர்கள் என பேசியிருந்தார். தற்போது தாழ்த்தப்பட்ட சமூக மக்களை இழிவுப்படுத்தியிருப்பதால் அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு நரேந்திரன் தெரிவித்துள்ளார்.

click me!